10% இடஒதுக்கீடு - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு

அனைத்து கட்சி கூட்டம்

  • News18
  • Last Updated :
  • Share this:
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 3 கட்சிகள் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட 3 கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசிப்பதற்கான அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலமாக, தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

இதில் அகில இந்திய ஒதுக்கீடு, பொதுப்பிரிவினருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், மீதம் 586 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்தார். அனைத்துக்கட்சியினர் கூறும் கருத்துகளின் அடிப்படையில் 10% ஒதுக்கீட்டில் முடிவெடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின் - திமுக:

இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ’சமூக நீதிக் கொள்கையில் கை வைப்பதற்கு இதுவரையில் இருந்த 14 பிரதமர்களும் துணிந்ததில்லை. கூடுதலாக 25% சீட் தருவதாகக் கூறியதை நம்பி 10% இட ஒதுக்கீட்டை ஏற்கக் கூடாது. 10% இடஒதுக்கீடு தமிழகத்தின் சமூக நீதியை நீர்த்துப் போகச் செய்யும். முன்னோர் வழங்கிய இட ஒதுக்கீடு உரிமையை எந்த காலத்திலும், நெருக்கடியிலும் விட்டுத் தரக் கூடாது’ என்று வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்:

அந்தக் கூட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ‘10% இட ஒதுக்கீட்டால் சமூக நீதி வலுக்கும். மாநில அரசு, இதனை தைரியமாக அனுமதிக்க வேண்டும்.  10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுதான் சமூக நீதியை நிலைநாட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் - விசிக:

இந்தக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘பத்து சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வகையில் தமிழக அரசு துணிந்து முடிவெடுக்க வேண்டும்.

சமூக நீதிக்கு எதிரான சக்திகள் திட்டமிட்டு செய்யும் சதிதான் 10% இடஒதுக்கீடு. சமூக நீதி கோட்பாட்டு அடிப்படையில்தான் இதனை அணுக வேண்டும். நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தமிழிசை - பாஜக:

இந்தக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தேர்தல் வாக்குறுதியிலும் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்து. இந்த 10% இடஒதுக்கீட்டால் தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிக மருத்துவ இடங்கள், அதிக வாய்ப்புகள் கிடைப்பதை ஏன் மறுக்க வேண்டும்? எந்தவிதத்திலும் 69% பங்கம் வராமல் 10% செயல்படுத்தினால் ஏன் நாம் ஏற்கக்கூடாது. 10% இடஒதுக்கீடு திட்டம் தமிழகத்துக்கு ஏற்றத்திற்கான திட்டமே தவிர ஏமாற்றத்திற்கான சட்டம் இல்லை’ என்று தெரிவித்தார்.

பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் :

இந்தக் கூட்டத்தில் பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், ‘தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட முடியாமல் உள்ளது. 10% இடஒதுக்கீடு அவசர கதியில் பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது. அனைத்துக் கட்சியினரிடமும் ஆலோசிக்க வேண்டும்.

ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் பொருளாதார அளவு என்பது நலிந்தோருக்கானதாக இருக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று தெரிவித்தார்.

சீமான்- நாம் தமிழர் கட்சி:

இந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘நாட்டின் முதல் குடிமகனே கோவிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலையை வைத்துக்கொண்டு 10% ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இரட்டைக்குவளை முறை இன்னமும் உள்ளது. 10% இடஒதுக்கீடை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.

கே.எஸ். அழகிரி - காங்கிரஸ்

பத்து சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து இல்லாதநிலையில், 10% இடஒதுக்கீடுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது’என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜி.கே. மணி - பாமக

தமிழகத்தில் 10 விழுக்காடு இடஒதுக்கீடை ஏற்கக் கூடாது என்று பாமக வலியுறுத்தியுள்ளதாக அதன் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

கமல்ஹாசன் - ம.நீ.ம

இடஒதுக்கீடுக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் இணைப்புப் பாலம் போடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு என்ற கனவு பலிக்காத நிலையில், அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
Published by:Karthick S
First published: