• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தேர்தலில் வெற்றியை எளிதில் பெற விடமாட்டார்கள்: மு.க. ஸ்டாலின்

தேர்தலில் வெற்றியை எளிதில் பெற விடமாட்டார்கள்: மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

 • Share this:
  வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும் என்றும், ஆனால், அந்த வெற்றியை எளிதில் பெற விடமாட்டார்கள் என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

  அப்போது கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் துரைமுருகன், டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 16,000 கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராமசபை கூட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டங்களின் மூலம் 1500 நிர்வாகிகள் சுமார் 80 லட்சம் மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளதாக கூறினார். மேலும், விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய தீர்மானத்தையும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

  கூட்டத்தின் போது, அதிமுகவை புறக்கணிப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுமாறு மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அடுத்து வரவிருப்பது திமுக ஆட்சிதான். நம்மால்தான் சிறப்பான ஆட்சியைத் தர முடியும். நாம்தான் வெற்றி பெறப்போகிறோம், ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள். உங்களுடைய சக்தியை முழுமையாக கொடுக்க வேண்டும், அப்படி கொடுத்தால்தான் வெற்றிபெற வேண்டும்.

  117 தொகுதியில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைத்துவிடலாம் ஆனால் அது போதாது. நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெற்ற வெற்றிதான் முழுமையான வெற்றி. கலைஞர்தான் வேட்பாளர், உதயசூரியன் தான் சின்னம் அந்த ஒற்றை இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். கழக ஆட்சி, என்ற ஒற்றை இலக்கை நோக்கி உழைக்க வேண்டும்.

  Also read: ’நம்பிக்கை துரோகத்தால் அதிகாரத்துக்கு வந்த ஈபிஎஸ், என்னை விமர்சிக்க அருகதை இல்லை’ - ஸ்டாலின் காட்டம்

  நாம் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நம்மை சுற்றி இருப்பவர்களும் வெற்றிபெற வேண்டும். தனிமரம் தோப்பாகாது. 6வது முறையாகவும் திமுக ஆட்சி அமைக்கவேண்டும் . தற்போது நாம் மும்முனை தாக்குதலில் இருக்கிறோம்.

  பாஜவின் அதிகாரம், அதிமுகவின் பணபலம், அவர்களுக்கு துணைபோகும் ஊடகம் என மும்முனைத்தாக்குதல். எந்த தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். ஆளும்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான வியூகத்தை தலைமை அமைத்தாலும், நீங்களும் அமைக்க வேண்டும். அதிமுக பணத்தை கொடுத்தாலும் , பல தேர்தலில் தோற்று உள்ளது. எனவே பணமா? மக்களின் மனமா என்றால் மக்களின் மனம்தான் வெல்லும். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை.

  தமிழகத்தையே சீரழித்து வைத்துள்ளனர். டிசம்பர் 23ம் தேதியில் இருந்து 10 நாட்கள், கிராமங்களுக்கு நம்முடைய செயலாளர்கள் பயணிக்க வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பொறுமையாக எளிமையாக பதில் அளிக்க வேண்டும்.

  அதிமுக ஆட்சியின் அவலங்களை, திமுக ஆட்சியில் இருந்த 5 முறையும், இனி வந்தால் என்ன செய்வோம் என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் மனதிலும் "அதிமுகவை அகற்றுவோம்" என்பதை விதைக்கவேண்டும். சிலரைக் கட்டாயப்படுத்தி கட்சி துவங்க வைக்கிறார்கள். ஜனவரி முதல் வாரத்தில் பிரசாரத்தை துவங்க உள்ளேன். தேர்தல் முன்கூட்டியே வரும் சூழல் உள்ளது, அதற்குதான் நாம் இப்போதே தயார் ஆகி வருகிறோம்.

  நம்முடைய இலக்கு 200 தொகுதிக்கு மேல். இதற்கு ஒரு இன்ச் கூட குறையக்கூடாது. நம்மால் முடியும், நம்மால் மட்டுமே முடியும். மிஷன் 200 என்ற இலக்கோடு பயணிப்போம்”

  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Rizwan
  First published: