புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ளது பகவான் டீ ஸ்டால். சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான இந்த கடை, கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
விளைநிலங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்த டீ கடைக்கு, விவசாயிகளே பிரதானமான வாடிக்கையாளர்கள். சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெறும்போது, கூலி ஆட்களுக்கு பகவான் கடையில் இருந்துதான் டீ வாங்கிச் செல்வது வழக்கமாம். இதற்கான தொகையை பணிகள் முடிவடைந்தோ, அல்லது அறுவடை முடிந்தோ உரிமையாளர்களிடம் வழங்குவதுண்டு.
ஆனால், கஜா புயலின் கோர தாண்டவத்தால் தென்னை, வாழை என அனைத்தும் பயிர்களையும் இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் விவசாயிகள்.
இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், பகவான் டீ ஸ்டால் உரிமையாளர் சிவக்குமாரும், தன்னால் இயன்ற உதவியை செய்திருக்கிறார். அதாவது, கடையில் விவசாயிகள் பாக்கி வைத்துள்ள அனைத்து கடனையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்து, அறிவிப்பு நோட்டீஸை ஒட்டியுள்ளார்.
கடை பாக்கி தள்ளுபடி செய்த மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சிவக்குமாரின் இந்த மனிதாபிமான செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
டீ கடைக்காரருக்கு இருக்கும் இந்த கருணை உள்ளம், விவசாய வங்கிக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசுக்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.