ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வரும் துணை முதல்வரும் துவக்கி வைக்க உள்ளனர் - ஆர்.பி.உதயகுமார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வரும் துணை முதல்வரும் துவக்கி வைக்க உள்ளனர் - ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

வீர தமிழர்களின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டி கொரோனோ பெருந்தொற்று காலத்தில் மருத்துவ குழுவின் வழிகாட்டுதலை பின்பற்றி நடத்தப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அலங்காநல்லூர்பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர், எஸ்பி நேரில் ஆய்வு செய்தனர்.

  தைப் பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் 14, 15, 16 தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பாலமேட்டிலும் ஆய்வு நடத்தினர்.

  கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது, 50 சதவீத பார்வையாளர்களை கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி எவ்வாறு அனுமதிப்பது, தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்களுக்கான கேலரி அமைப்பது போன்ற நடைமுறைகள் குறித்தும் இந்த ஆய்வின்போது ஆலோசிக்கப்பட்டது.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “வரும் 16ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் துவக்கி வைக்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.

  மேலும், போட்டியை நேரில் துவக்கி வைத்துவிட்டு போட்டியை முதல்வரும் துணை முதல்வரும் நேரில் காண்பார்கள் என்றும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உதவியாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்படும் முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்து சான்றிதழ்களை பெற்று வரலாம் எனவும் கூறினார்.

  போதிய உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைக்க விழா குழுவினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

  வீர தமிழர்களின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை கொரோனோ பெருந்தொற்று காலத்தில் மருத்துவ குழுவின் வழிகாட்டுதலை பின்பற்றி நடத்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முறையாக நடத்துவதை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Jallikattu