பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாள்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தமுறை ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிடுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்தனர். இந்தநிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் கண்ணன் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாம் பரிசு வென்ற கருப்பண்ணன் புகார் அளித்தார்.
அதனையடுத்து, கோட்டாசியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கோட்டாசியர் விசாரணையில், ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, 33-வது எண் கொண்ட பனியனை அணிந்திருந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் காயம் காரணமாக போட்டியின் தொடக்கத்திலேயே களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவரது டிசர்ட்டை அணிந்து கண்ணன் என்பவர் தொடர்ந்து காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பெயர் பதிவு செய்யப்படாமல் கண்ணன் களத்தில் இறங்கியிருந்தாலும் அவர் தொடர்ச்சியாக காளைகளை அடக்கியுள்ளார். எனவே, முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பதை விழா கமிட்டியே முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பரிசுகளை அறிவித்து வழங்கினார். அந்த நேரத்திலேயே குளறுபடி செய்யப்பட்டுள்ளதாக பலரும் குரல் எழுப்பியதுடன் அவரை முற்றுகை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்