ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய கிராம மக்களுக்கு விமானப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் முப்படை இராணுவ அதிகாரிகளின் Mi-17V5 ரக ஹெலிகாப்டர் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விமானம் அருகில் குன்னூர் இராணுவப்பயிற்சி கல்லூரி மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.
இந்தச்சம்பவம் பற்றி அறிந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள், அவரது துணைவியார் மற்றும் 11 இதர இராணுவ அதிகாரிகள் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
தொடர்ந்து, டெல்லி விமானப்படை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள், இன்று காலை 11:00 மணிக்கு, டெல்லி காமராஜர் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கியது. தொடர்ந்து, மாலை 5 மணியளவில், பிரார் சதுக்கம் இடுகாட்டில், 17 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய கிராம மக்களுக்கு விமானப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை என மளிகை பொருட்களை வழங்கிய இந்திய விமானப்படையினர், அம்மக்களுக்ககு கைகூப்பி வணங்கி நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
மேலும் இந்திய விமான படை சார்பில் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.