கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு? - விமானப்படை தளபதி பதில்
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு? - விமானப்படை தளபதி பதில்
பி.எஸ் தனோவா
அபிநந்தனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும். அவருடைய உடற் தகுதியைப் பொறுத்து விமானங்களை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா கோவையில் பேட்டியளித்துள்ளார்
பயங்கரவாத முகாம்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை கணக்கிட முடியாது என்று விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா கோவையில் பேட்டியளித்துள்ளார்.
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.
பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம் அழிக்கப்பட்டதாகவும், 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
உண்மையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதா, எத்தனை பேர் இறந்தார்கள், அதற்கான ஆதாரம் எங்கே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் குறித்து விமானப்படை தளபதி தனோவா கோயம்பத்தூர் மாவட்டம் சூலூரில் பேட்டியளித்துள்ளார்
“இந்திய விமானப்படை சிறப்பான திறன் கொண்டது. இலக்கை சரியாக தாக்கியுள்ளோம், அதனால் எதிர் தரப்பில் இருந்து பதில் தாக்குதல் வந்தது.
பயங்கரவாத முகாம்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை இந்திய விமானப்படை கணக்கிடாது, எத்தனை இலக்குகளை தாக்கியுள்ளோம் என்பதை தான் கணக்கிடும்.
அரசு தான் உயிரிழப்புகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். அபிநந்தனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும். அவருடைய உடற் தகுதியைப் பொறுத்து விமானங்களை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
மிக் 21 பைசன் போர் விமானம் மேம்படுத்தப்பட்ட விமானமாகும் . அதிநவீன இயந்திரங்கள், ரேடார் கருவிகளும் மிக் 21 பைசன் போர் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
திட்டமிட்டு தாக்குதல் நடைபெறும் போது அதற்கேற்ற போர் விமானங்கள் பயன்படுத்தப்படும். திடீர் தாக்குதல் வரும்போது அனைத்து விமானங்களும் பதில் தாக்குதலில் ஈடுபடும். எல்லா விமானங்களும் எதிர் தாக்குதலுக்கு தகுதியானவைதான்.
செப்டம்பர் மாதம் ரஃபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்” என்று விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார்.
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.