அண்ணா பல்கலைக்கழகம் இரு எம்.டெக் படிப்புகளை தொடங்க அனுமதிக்க முடியாது - அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்

அண்ணா பல்கலைக்கழகம் இரு எம்.டெக் படிப்புகளை தொடங்க அனுமதிக்க முடியாது - அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்

அண்ணா பல்கலைக்கழகம்.

சூழலை கருத்தில் கொண்டு இது தொடர்பாக AICTE யிடம் கேட்டு மீண்டும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஏன் இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமோ மாநில அரசோ உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்வு காணக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகளை தொடங்குவதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்து விட்டதால், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இரு எம்.டெக் படிப்புகளையும் தொடங்க அனுமதிக்க முடியாதென அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிடகோரிய இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு எம்.டெக் படிப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும் என உறுதி அளித்தார். எனினும், மத்திய அரசு இட ஒதுக்கீடோடு சேர்த்து மாநில அரசினுடைய இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தி படிப்பை தொடர்ந்து நடத்த மேலும் 9 இடங்களை உருவாக்குவதற்கான AICTE 'யின் அனுமதி தேவை என்று தெரிவித்தார்.

Also read... வீடற்ற ஏழை குழந்தைகளுக்கு இலவச டியூசன் - அசத்தும் இளைஞர்!

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு எம்டெக் படிப்புகளை தொடங்குவதற்கான காலஅவகாசம் கடந்த ஆண்டு டிசம்பரோடு நிறைவடைந்து விட்டதால் தற்போது அனுமதி அளிக்க முடியாதென தெரிவித்தார்.

அரிதான சூழலை கருத்தில் கொண்டு இது தொடர்பாக AICTE யிடம் கேட்டு மீண்டும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஏன் இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமோ மாநில அரசோ உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்வு காணக்கூடாது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடமும், அண்ணா பல்கலைக் கழகத்திடமும் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்குமாறு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிற்பகல் 2.15 க்கு ஒத்திவைத்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: