நகர்ப்புறங்களில் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றனர்.
15-வது நிதி ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், நகர்ப்புறங்களில் 25 சதவீதம் முதல் 150 சதவிகிதம் வரை, சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொத்து வரியை உயர்த்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருடைய வீட்டு மக்களை பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், நாட்டில் என்ன நிலவரம் என்பதுகூட தெரியாமல் இருக்கிற ஒரே முதலமைச்சர் தமிழக முதல்வர் தான் என்றும், கொரோனா தொற்றால் இரண்டாண்டு காலம் வேலை இல்லாமல் வாழ்வாதாரமே இழந்து இருக்கிற நிலையில் மக்கள் விரோத அரசு மக்கள் மீது மிகப்பெரிய வீட்டு வரிச்சுமையை சுமத்தியிருக்கிறது. அம்மாவின் அரசாங்கத்தில் வரியே உயர்த்தப்படாமல் இருந்தது. மத்திய அரசு வரியை உயர்த்தும்படி கூறவில்லை. திமுக அரசு மத்திய அரசு மீது பழிபோட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது என்று கூறினார்.

சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்
இதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் திமுக வாக்குறுதியை மீறிவிட்டதாகவும், இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதேபோன்று மாவட்ட தலைநகரங்களில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கொஞ்சமும் மனசாட்சியின்றி சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக, அமமுக தலைமை கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நகர்ப்புறங்களில், வரும் 10-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும், அமமுக அறிவித்துள்ளது.
Must Read : நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? - ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு விளக்கம்
இதேபோன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை கசக்கிப் பிழிந்து வரியை வசூலித்து, அதன் மூலம் ஆட்சி புரிய நினைப்பது கொடுங்கோன்மையின் உச்சம் என கண்டனம் தெரிவித்துள்ளார். வரி உயர்வை திரும்பப் பெறுவதுடன், நிதிஆதாரத்திற்கு மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்துக்கான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் எனவும், சீமான் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.