தமிழ்நாட்டில் அதிமுக 50 ஆண்டு காலம் கடந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் பல்வேறு உச்சபட்ச வெற்றிகளையும், அதே போல தோல்விகளையும் கண்ட கட்சி அது. அந்தக் கட்சியின் நகர செயலாளராக இருந்து முதலமைச்சர் வரை உயர்ந்து கட்சியின் தலைமை பொறுப்பு வரை வகித்த ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசியல் வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பல இழப்புகளை சந்தித்து வருகிறார்.
2021 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி ஓ.பன்னீர்செல்வத்தின் உடன்பிறந்த சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மாமியார் மரணம், இப்படி அடுத்தடுத்து மரணங்கள் அவரது குடும்பத்தில் நிகழ்ந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வயிறு பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தனக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்தவர் தன் மனைவி என்றும், வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளிலும் தான் முன்னேறியதற்கு தன் மனைவி உறுதுணையாக இருந்ததாகவும் அப்போது அவரே கூறினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெடித்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த நிலையில். அவரை கட்சியிலிருந்தும் எல்லா பொறுப்புகளில் இருந்தும் அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நீக்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் முறையீடு செய்தார் ஓபிஎஸ். தீர்ப்பு கடந்த 23ஆம் தேதி வெளியானது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மகிழ்ச்சியாக உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அதற்கு அடுத்த நாளே கடந்த 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் 95 வயதில் வயது முதிர்வு காரணமாக இறந்தார். ஒருபுறம் அரசியலில் சரிவு, மறுபுறம் வாழ்க்கை துணைவி மற்றும் தாயின் மரணம் என அடுத்தடுத்த இழப்புகள் ஓ.பன்னீர்செல்வத்தை வதைக்கிறது. இப்படி பல்வேறு சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து வந்து அவர் மீண்டும் அரசியலில் பயணிப்பார், மக்களுக்கு சேவை புரிவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, O Panneerselvam