பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, அதிமுக நான்காக உடைந்துள்ளது. அடுத்தது பாமகதான் என கூறியிருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவால் தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி பதவி கிடைத்துள்ளது என்பதை அவர் மனதில் வைத்து பேச வேண்டும். பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அதிமுகதான். அதிமுக ஏற்றி விடவில்லை என்றால் பாமக என்ற கட்சியே கிடையாது என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, “பாமக குறித்து விமர்சிக்கும்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கவனம் தேவை. அவரின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்த கருத்து குழந்தைக்கு கூட தெரியும். ஜெயக்குமாரின் கருத்து தொடர்பாக அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலின்போது 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதிமுக ஆட்சியைத் தக்க வைக்க பாமக பலமாக இருந்த வடமாவட்ட தொகுதிகளில் ஆதரவு அளித்தோம். அதன்மூலம் எடப்பாடி பழனிசாமி இரண்டு ஆண்டுகள் முதல்வராக தொடர்வதற்கு நாங்கள் காரணமாக இருந்தோம் என்று கூறிய பாலு, 1998ஆம் ஆண்டு பாமகவுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா வழிமேல் விழிவைத்து காத்திருந்தார் என்று குறிப்பிட்டார்.
மேலும், அதிமுக எப்போதெல்லாம் வீழ்ந்துகிடந்ததோடு அப்போதெல்லாம் அது உயிர்ப்பெற காரணமாக இருந்தது பாமக என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால், பாமக தயவால் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்கள் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. மக்களவை தேர்தல் நேரத்தின் ஏற்பட்ட கூட்டணி உடன்படிக்கையின்படியே அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆகவே, கூட்டணி முடிந்த பிறகு அதுபற்றி கருத்து தெரிவிக்கக் கூடாது. தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.