சட்டமன்ற தேர்தல்: நாளை ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக தலைமை திட்டம்!

அதிமுக அலுவலகம்

அதிமுகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் நிறைவடைந்த நிலையில், நாளை நேர்காணல் நடைபெற உள்ளது.

  • Share this:
    சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த 24ம் தேதி முதல், விருப்பமனுக்கள் பெறப்பட்டு வந்தன. விருப்பமனுக்களை சமர்ப்பிக்க மார்ச் 5ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டிருந்த நிலையில், திடீரென மாற்றப்பட்டு புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டவர்கள், விருப்பமனுக்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். 8,174 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ள நிலையில், ஏழாயிரம் பேர் விருப்பமனுக்களை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்பமனுக்களை தாக்கல் செய்தவர்களிடம்,நாளை ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

    அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. வரும் 10ம் தேதி வரை விருப்பமனுக்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை பெற்றனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சியின் துணை பொதுச்செயலாளர் பழனியப்பன், விருப்பமனுவை தாக்கல் செய்தார்.

    இதற்கிடையே, திமுக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்தில், 2வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. நேரமின்மை காரணமாக ஒரே நேரத்தில் ஐந்து பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் 7, 969 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ள சூழலில், ஏழாயிரம் பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: