செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அருகே உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 42 வயதான சேகர் அதிமுக பிரமுகராவர். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் செல்வி நகரில் தன் நண்பர் ராமலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், சேகரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். நிலைகுலைந்த சேகர் கீழே விழவே அந்த கும்பல் அவரது தலையைத் துண்டித்து அங்கேயே போட்டு விட்டு தப்பியோடியது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ஆம் ஆண்டு பொன்விளைந்த களத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் விஜயகுமார். அப்போது அதிமுக அவைத் தலைவராக இருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன். இருவருக்கும் இடையே மணல் கடத்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அதனால், குப்பன், அவரது மகன் தேமுதிக பிரமுகரான துரைராசு ஆகியோர் சேர்ந்து கூலிப்படை மூலம் விஜயகுமாரைக் கொலை செய்தனர். இந்த வழக்கில் குப்பன், துரைராசு உள்ளிட்டோர் கைதாகி ஜாமினில் விடுதலையாகினர்.அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு குப்பனும், 2015ஆம் ஆண்டு அவரது மகன் துரைராசுவும் விஜயகுமாரின் சகோதரர் சுரேஷால் படுகொலை செய்யப்பட்டனர்.
விஜயகுமார் கொலை வழக்கில் புதுப்பாக்கம் சேகருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் கூலிப்படை மூலம் சுரேஷ் தான் சேகரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுப்பாக்கம் சேகரும் சுரேஷும் திமுகவில் பணியாற்றியவர்கள். ஒருகட்டத்தில் சுரேஷின் போக்கு பிடிக்காமல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில்தான் சுரேஷ் தனது கூட்டாளிகள் மூலம் சேகரைக் கொலை செய்துள்ளார் என்கின்றனர் போலீசார். கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சுரேஷ் உள்ளிட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
கொலைக் குற்றவாளிகளைப் போலீசார் தேடி வந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் முன்னிலையில், சுரேஷ், கெளதம், மணிகண்டன், பாபு, மொய்தீன் மற்றும் மகேஷ் ஆகிய 6 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் விசாரணையில் எடுத்த பின்தான் கொலையின் பின்னணி தெரியவரும் என்று போலீசார் கூறுகின்றனர்.
மேலும் படிக்க...ரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..
சமீபத்தில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி குறையாத நிலையில், மீண்டும் ஒரு அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.