கடந்த ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு களேபரங்களுக்கு இடையே அதிமுகவின் தலைமை அலுவலகம் வருவாய்த்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
அதிமுக தொடங்கப்பட்டு 50வது ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. பொன்விழா ஆண்டான 2022-ல் அக்கட்சியில் பெரும் பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்பட்டு அலுவலகமும் சீல் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது அக்கட்சிக்கு புதிதல்ல. அக்கட்சியின் வரலாற்றில் அதிமுக அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’ சீல் வைக்கப்படுவது இது மூன்றாவது முறை.
ராயப்பேட்டையில் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தை எம்ஜிஆரின் மனைவி ஜானகி 1957-ம் ஆண்டு வாங்கினார். அதை 1987-ம் ஆண்டு தன் கணவரான எம்ஜிஆரிடம் கொடுத்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது மனைவி ஜானகி தலைமையில் ஜா அணி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஜெ அணியாக அதிமுக பிரிந்தபோது யார் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவது எனப் போட்டி நிலவியது. எம்ஜிஆர் மறைவிற்குப் பின் ஜானகி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட 15 நாள்களில் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக அலுவலகம் சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி சீல் வைக்கப்பட்டது.
அதன் பின் நீதிமன்ற வழக்குகள் மூலமாக ஜானகி அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தபோது இரு அணிகளும் ஒன்றிணைந்து கட்சி, தலைமை அலுவலகம் இரண்டுமே ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டிற்குச் சென்றிருந்தது. அதன் பின்பு ஜெயலலிதா அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அதே போல் 1990-ம் ஆண்டு சு.திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்ற முயன்றபோது அவர்களுக்கும் ஜெயலலிதா ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதன் காரணமாக மீண்டும் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையேயான பிரச்சினையால் மூன்றாவது முறையாக அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பிரச்சினை நீதிமன்றம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.