Home /News /tamil-nadu /

அதிமுகவில் பொதுச்செயலாளராக என்ன தகுதி வேண்டும்? புதுவிதிப்படி.. இபிஎஸ்-ன் ப்ளஸ்.. ஓபிஎஸ்-ன் மைனஸ்..

அதிமுகவில் பொதுச்செயலாளராக என்ன தகுதி வேண்டும்? புதுவிதிப்படி.. இபிஎஸ்-ன் ப்ளஸ்.. ஓபிஎஸ்-ன் மைனஸ்..

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

ADMK : பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் உறுப்பினர், கட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பது அவசியம் என விதியில் உள்ளது.

    சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டவிதிகளை மாற்றி அமைத்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில் முதல் 8 தீர்மானங்கள் குறித்து உரையாற்றினார். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி 20 நீக்கப்படுவதாகவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவிகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பொதுச்செயலளார் என மாற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

    துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதிலாக, துணைப் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
    பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் உறுப்பினர், கட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பது அவசியம் என்றும் தீர்மானம் குறித்து விளக்கினார்.

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நபர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் சட்டவிதிகள் மாற்றி அமைக்கப்படுவதாகவும் கூறினார். இதேபோல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களை பொதுச் செயலாளர் நியமனம் செய்வார் என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். பொதுச்செயலாளர் 5 ஆண்டுகளுக்கு பொறுப்புகளில் நீடிப்பார் எனவும் அவர் கூறினார்.

    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரட்டை பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேவேளையில் அதிமுகவை பலவீனப்படுத்த திமுகவுடன் நட்பு பாராட்டுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பொதுக்குழு.பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார்.

    பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் உறுப்பினர், கட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பது அவசியம் என விதியில் உள்ளது. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால் கட்சி விதிப்படி அவர் போட்டியிடுவதிலே சிக்கல் உள்ளது. அடிப்படை உறுப்பினர் இல்லாத ஒருவர் கட்சி பொறுப்புகளுக்கு போட்டியிட முடியாது.

    எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருப்பது பொதுக்குழு கூட்டம் மூலம் நிரூபணமாகியுள்ளது. பொதுக்குழு மேடையில் பேசிய நிர்வாகிகள் இபிஎஸ்-ஐ புகழ்ந்து தள்ளினர். ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் ராமனாக அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்டும்போது லட்சுமணனை காணவில்லை என கலங்க வேண்டாம். இதோ ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணனாக நம்மிடத்திலே இருக்கிறார்கள் எனப் புகழ்ந்து தள்ளினார். ஓ.எஸ். மணியனோ புரட்சித் தலைமகன் எடப்பாடியார் என ஒருப்படி மேலே புகழ்ந்தார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடியார் விரைவில் பொதுச்செயலாளராவார் என்ற குரலே பொதுக்குழு அரங்கில் ஓங்கி ஒலித்தது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Edappadi palanisamy, O Pannerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி