முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுக்குழு.. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு..

அதிமுக பொதுக்குழு.. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு..

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

ஜூலை 11 பொதுக்குழு குறித்து சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை பொதுக்குழு நோட்டீஸ் என எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியது.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11 ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், ஆனால் ஜூலை 11ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திங்கள் மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை நேற்றைய தினம் முதல் விசாரித்து வருகிறார்.

நேற்றைய விசாரணையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யவும் இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று தள்ளிவைத்தார்.

அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது எடப்பாடி பழனிசாமி தனது பதில் மனுக்களை தாக்கல் செய்து வாதிட்டது. அதில், நீதிமன்றம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட எந்த கூட்டத்துக்கும் நிகழ்ச்சி நிரல் வழங்கப்பட்டதில்லை. தற்போது வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் கட்சி அலுவலகத்தால் விநியோகப்பட்டவை. இந்த வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை.2,665 உறுப்பினர்களில் 2,190 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனிடையே, ஜூலை 11 கூட்டத்துக்கு கட்சி விதிகளின் படிதானே முறைப்படி அறிவித்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2,432 உறுப்பினர்கள் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது. அப்போது தலைமை கழக நிர்வாகிகள் பொறுப்பை ஏற்று கொள்வார்கள்.பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர மற்ற நிவாரணங்களை கேட்கலாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது..

2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கும் எதிராகவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒட்டு மொத்த கட்சியும் தனக்கு எதிராக இருப்பதாக நினைத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை.

கட்சி விதிகளை மாற்றம் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சி விதிகளின் திருத்தம் செய்ய செயற்குழுவுக்கு அதிகாரமில்லை.

செயற்குழு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த போதும், அடுத்த பொதுக்குழுவில் அதை முன் வைத்து ஒப்புதல் பெறவும் தீர்மானிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என செயற்குழு தான் முடிவெடுத்தது

அதில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் மூலமாக இந்த முடிவை பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு முன் வைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலும் செல்லாது. அதனால் இரு பதவிகளும் காலியாகி விட்டன என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானால் இருவரால் நியமிக்கப்பட்ட 74 தலைமை கழக நிர்வாகிகளுக்கு தான் முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

2016 டிசம்பர் 29ம் தேதி தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை கட்சி நிர்வாகிகள் நியமித்தனர். அதன் பின் சொத்து வழக்கில் சிறை சென்றார். 2017 செப்டம்பர் 12ல் நடந்த பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் கட்சி நிர்வாகிகளால் அனுப்பப்பட்டது. அதில் தலைமைக்கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

இதே போல தான் இப்போதும் தலைமை கழக நிர்வாகிகள் செயல்படுகிறார்கள். வழக்கமாக நடைபெறும் பொதுக்குழு கூட்டதுக்கு தான் 15 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது போன்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு பொரும்பாண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை தெரிவித்தால் 15 நாட்கள் அவகாசம் என்பது அவசியமில்லை. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள்.

ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் குறித்து ஜூன் 23 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டு விட்டது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்தார்கள். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கூட அறிந்து கொண்டார்கள். ஓ.பி.எஸ் தனக்கு தெரிவிக்காமல் பொதுக்குழு அறிவிக்கப்பட்டதாக கூற முடியாது.

நேற்று நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், தன்னுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள ஒட்டு மொத்த கட்சிக்கு எதிராக ஒ.பி.எஸ் செயல்படுகிறார் என்றும் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு கட்சியின் நலனுக்கான வழக்கே இல்லை, தனிநபர் தேவைக்கான வழக்கு. பொதுக்குழுவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர முக்கூட்டியே அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பிரச்சனை பற்றி பொதுக்குழுவில் ஓபிஎஸ் விவாதித்திருக்க வேண்டும், நீதிமன்றத்திற்கு வந்திருக்கக்கூடாது. 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற கோரிக்கை ஓபிஎஸ் மனுவிலேயே இல்லை என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கட்சி நலனுக்காக வழக்கு தொடர்ந்ததாக கூறும் ஓபிஎஸ், தனக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். ஒ.பி.எஸ். மனுவை அபராததுடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென இ.பி.எஸ். தரப்பில் இடைக்கால பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தில், இரு பதவிகளும் காலியாக உள்ளதாக முன் வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். இறந்த கட்சியில் என்ன ஆனது என்பது குறித்து இ.பி.எஸ் தனது மனுவில் விளக்கவில்லை.

தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும். அதிமுகவை பொறுத்தவரை 1987 மற்றும் 2016ல் அப்படி தாம் ஒரு நிலை இருந்தது. சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு 15 நாட்கள் முன் நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை என இபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் கூட்ட வேண்டும்.

ஜூலை 11 பொதுக்குழு குறித்து சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை பொதுக்குழு நோட்டீஸ் என எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியது.

தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திங்கள் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

11 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் , நடைபெற உள்ள நிலையில், 9 மணிக்கு பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

First published:

Tags: ADMK, OPS - EPS