Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழு கூட்டமும் நீதிமன்றங்களில் நிகழ்ந்த பரபரப்பான வாதங்களும்!

அதிமுக பொதுக்குழு கூட்டமும் நீதிமன்றங்களில் நிகழ்ந்த பரபரப்பான வாதங்களும்!

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ADMK : அதிமுகவின் இரு தரப்பினரும் சட்டப்போராட்டத்துக்கு இடையே இன்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அதிமுகவின் இரு தரப்பினரும் சட்டப்போராட்டத்துக்கு இடையே பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களில் நிகழ்ந்த பரபரப்பான வாதங்கள் குறித்து பார்ப்போம்.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் சார்பில் தொடர்ப்பட்ட வழக்கு ஜூன் 22 ஆம் தேதி தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் திருத்தம் கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றவுள்ள 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது. ஈபிஎஸ் தரப்பில், பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் ஏதும் அறிவிக்கப்பட மாட்டாது எனவும், முந்தைய காலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். மேலும், கட்சி விதிகளை திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர்.

    பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்சிதான் முடிவுசெய்யும் என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நள்ளிரவு 2 மணியளவில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஒற்றை தலைமையை ஏற்றால் தான் பொதுக்கூட்ட பாஸ் வழங்கப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அதனால் பொதுக்குழு உறுப்பினரான மனுதாரருக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்பட போகிறது என நிரூபிக்கவில்லை என ஈ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

    விசாரணை முடிவில் பொதுக்குழு நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம் என்றும், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதன் பிறகு ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா?பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்?என்பது விரிவான பதில்மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்

    இதற்கு அளித்த பதிலில் 2021 டிசம்பரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை தொண்டர்கள் தேர்ந்தெடுப்பர் என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்றும், அதற்கு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், இரு பதவிகளும் காலியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.

    தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா சிறை சென்ற பின், 2017 செப்டம்பர் 12ல் நடந்த பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் தலைமைக்கழக நிர்வாகிகளால் தான் அனுப்பப்பட்டது எனவும் விளக்கமளித்தனர். மேலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால் தான் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் அவசியமில்லை எனவும் பதிலளித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலியாகி விட்டதாக முன் வைத்த வாதம் தவறு என்றும், ஒட்டு மொத்தமாக உள்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும் என வினவினர். கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை என்றும், திருத்தம் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது என்பதால் ஒப்புதல் என்பது வழக்கமான நடைமுறை தான் என்றும் தெரிவித்தனர்.

    Must Read : அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள்…

    தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும் என்றும், சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் கூட்ட வேண்டும் என்றும் விளக்கினர். அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை இன்று (திங்கட்கிழமை) 9 மணிக்கு தள்ளி வைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வெளியாகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, EPS, OPS

    அடுத்த செய்தி