நில அபகரிப்பு புகாரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி, தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக் கோரியும், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மகேசுக்கு எதிராக ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மகேசுக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி மகேஷ் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தரப்பில், கடந்த 2016ம் ஆண்டில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு தன் மீது வழக்கு பதியபட்டதாகவும், தன்னுடைய மருமகனுக்கும், அவரது சகோதரருக்கும் உள்ள பிரச்சனையில் தன்னை தவறாக இணைத்துள்ளதாகாவும், இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் உள்ளதால் மான நஷ்ட ஈடுக்கோரி தான் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மகேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், ஜெயக்குமார் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மகேஷ் தெரிவித்த நிலையில், அது தொடர்பாக எந்த ஆவணங்களையும் தனக்கு தரவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மகேஷ் தரப்பில் வாதங்களை முன் வைக்க அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court