ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த செயற்குழு கூட்டங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அவரது மறைவுக்குப் பிறகு 2016ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அவசர பொதுக்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் வி.கே.சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல், தர்ம யுத்தம், சசிகலா சிறை சென்றது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது என அதிமுகவின் உச்சக்கட்ட பரபரப்புகள் அரங்கேறின.
அடுத்ததாக இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் என பிரிந்து மீண்டும் ஓரணியாக சேர்ந்தபோது, 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து, பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கம், டிடிவி.தினகரன் நீக்கம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Also read: ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மறுக்கும் ராஜபக்சே: மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? - ராமதாஸ் கேள்வி
தொடர்ந்து, ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்து ஓராண்டு நிறைவில், 2018ம் ஆண்டும் மீண்டும் அதிமுக செயற்குழு கூட்டம் கூடியது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி கூடிய செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு அளிப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதை தொடர்ந்து, கடந்த 18ம் தேதி நடைபெற்ற அதிமுக உயர்மட்டக் குழு கூட்டத்தில், முதலமைச்சர் வேட்பாளர் யார்? சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், இன்று அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுகவின் செயற்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையை கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.