• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக-வில் உட்கட்சிப்பூசல் வெடிக்கிறதா?: இன்று கூடுகிறது மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

அதிமுக-வில் உட்கட்சிப்பூசல் வெடிக்கிறதா?: இன்று கூடுகிறது மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களான ரத்னசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோருக்கு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படு தோல்விக்கு பின் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்துவதுடன், பொதுக்குழுவை கூட்டி அ.தி.மு.கவை வழிநடத்த ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசினார். அவரைத்தொடர்ந்து, பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை என்றும் பொதுக்குழு தீர்மானத்தின்படியே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வருவதாகவும் அமைச்சர் சி.வி சண்முகம் விளக்கமளித்தார். சி.வி. சண்முகத்தின் கருத்தை மற்ற அமைச்சர்களும் ஆதரித்தனர். இவர்களுடைய பேச்சுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி எம்பியான மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்க முயற்சிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டவே ஒற்றைத் தலைமை குறித்த கருத்தை ராஜன் செல்லப்பா கூறியதாக பரவலாக பேசப்பட்டது.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, கட்சி பிரமுகர்கள் பொதுவெளியில் எதையும் பேசவேண்டாம் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இந்த பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்,பி-க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதற்கிடையில், நேற்று டெல்லி சென்ற தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அமித்ஷாவைச் சந்தித்தது, பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்புகள் ஏதும் நிகழாமல் தடுக்க மத்திய அரசின் உதவியை கோருவதற்காக அவர்கள் சென்றதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. பியுஷ் கோயலை சந்தித்ததில் அரசியல் பின்னணி இருக்கக்கூடும் என பத்திரிகையாளர்களும் விமர்சகர்களும் கூறியுள்ளனர்.

எனினும், தமிழகத்துக்குத் தேவையான 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான நிதியை பெறவும், மரியாதை நிமித்தமுமாகவே மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் கூறியுள்ளனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தவிர்த்தது ஏன்?

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தவிர்த்துவிட்டு பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அமித் ஷாவையும் உள்ளாட்சி நிதியை கோரவே சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது. சம்பந்தமே இல்லாமல் வேறு துறை அமைச்சரான அமித் ஷாவிடம் முன்வைத்திருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நிர்மலா சீதாராமனை அமைச்சர்கள் தவிர்த்தது ஏன்? இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுகிறாரா? மத்திய அரசு யார் பக்கம்? இரட்டைத் தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்து செயல்படுமா? என்ற பல கேள்விகளுக்கு இன்று நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டம் விடைதருவதாக இருக்கும் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களான ரத்னசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோருக்கு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Also see... உ.பி. யில் வெப்பத்தின் தாக்கத்தால் 4 தமிழர்கள் உயிரிழப்பு

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: