ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனினும், தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “உச்சநீதிமன்றம் தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டது. பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் கூறியுள்ளன. உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சொல்லும் வகையில் எங்களுக்கு திறமை இல்லை என்று தோன்றுகிறது. பொதுக்குழு கூட்டியது சரி, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து கூறவில்லை. ” என்று தெரிவித்தார்.
நியாயம் தங்கள் பக்கம்தான் உள்ளது என குறிப்பிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என கூறினார். மேலும், இந்த தீர்ப்பினை வைத்து இபிஎஸ் தரப்பால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாது என மனோஜ் பாண்டியன் கூறினார்.
பேட்டியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. தீர்ப்புக்கு பின்னர் எங்கள் தொண்டர்கள் புத்துணர்வு பெற்றுள்ளனர். கட்சி உடையக்கூடாது என்பதற்காகவே இதுவரை பொறுமை காத்து வந்தோம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார். மக்கள் மன்றத்தை நிச்சயம் நாடுவோம், மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நியாயம் கேட்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.