• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பா.ம.கவுடன் தொகுதி பங்கீடு: தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை - கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க

பா.ம.கவுடன் தொகுதி பங்கீடு: தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை - கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க

Youtube Video

பா.ம.க தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ள அ.தி.மு.க, தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி கூட்டணியில் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டியுள்ளது.

  • Share this:
    அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி வெளியேறிய நிலையில், அதிமுக, பாமக இடையே நேற்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக தலைவர் ஜி.கே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாமக போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

    வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அரசு ஏற்றதால், சட்டமன்ற தேர்தலில் குறைந்த தொகுதிகளை பெற்றதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    கடந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது.

    இதற்கிடையில், தேமுதிகவுடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்தனர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க முன்வந்ததாகவும். ஆனால், பாமக அளவிற்கு தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள விஜயகாந்த், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் கூட்டணி குறித்து கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் படிக்க... உங்கள் தொகுதி: 30 ஆண்டு காலம் அ.தி.மு.கவே வெற்றி - சங்கரன்கோயில் அறிந்ததும் அறியாததும்

    இதனிடையே, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயல்வீரர்களில் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஒரு சதவீதம் கூட தலைமைக்கழகம் முடிவு எடுக்காது என்றார்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: