ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக-வின் 47-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது

அதிமுக-வின் 47-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது

முதல்வர் மற்றும் துணை முதல்வர் (கோப்புப் படம்)

முதல்வர் மற்றும் துணை முதல்வர் (கோப்புப் படம்)

ஜெயலலிதாவின் வழியில் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமை அலுவலகத்தையும் மீட்போம் என்று டிடிவி.தினகரன் உறுதியளித்துள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியான அதிமுக-வின் 47-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற உழைப்போம் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் சின்னத்தையும், அதிமுக-வையும் அ.ம.மு.க., மீட்டெடுக்கும் என்று டிடிவி.தினகரன் உறுதியளித்துள்ளார்.

  திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அதிமுக-வை 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி எம்ஜிஆர் தோற்றுவித்தார். 1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையுடன் அதிமுக திகழ்கிறது.

  எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 5 முதலமைச்சர்களை அதிமுக கட்சி உருவாக்கியுள்ளது. எம்ஜிஆர், தொடர்ந்து 3 முறையும், ஜெயலலிதா தொடர்ந்து 2 முறையும் முதலமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு, கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில்,  அதிமுக-வின் 47-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.

  இதையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், தொண்டர்களுக்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில், அதிமுக-வை எம்ஜிஆர் தொடங்கியபோது, ஆட்சியில் இருந்தவர்கள் இழைத்த கொடுமைகளை எல்லாம் கடந்து நமது கட்சி மகத்தான வளர்ச்சியை கண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

  எம்ஜிஆரின் அரசியல் பாதையை அறியாதவர்களும், ஜெயலலிதாவின் தியாக உயர்வை மதிக்காதவர்களும், திடீர் தலைவர்களாக முளைத்து, அதிமுக-வை அசைத்துப் பார்க்க நினைத்ததாகவும், அவர்கள் மக்களால் அடையாளம் காணப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற உழைப்போம் என்று தொண்டர்களுக்கு ஓபிஎஸ்-ஸும், இபிஎஸ்-ஸும் அழைப்பு விடுத்துள்ளனர்.

  இதனிடையே, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வலிமையான அரசியல் கட்சியாக திகழ்ந்த அதிமுக-வை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆதிக்க சக்திகள், தங்களது பிடிக்குள் கொண்டுவந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நொடிவரை உண்மையான அதிமுக-வாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் வழியில் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமை அலுவலகத்தையும் மீட்போம் என்று டிடிவி.தினகரன் உறுதியளித்துள்ளார்.

  ALSO READ...

  "அடிப்படை உறுப்பினரே இல்லை... எதற்கு அவங்க புதுப்பிக்கணும்"- சசிகலா குறித்து ஓபிஎஸ்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: 47th anniversary, AIADMK, EPS, Jayalalitha, MGR, OPS