இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் திமுகவின் மூத்த தலைவர் ஏ கோவிந்தசாமியின் மகனான ஏ ஜி சம்பத் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரும் அவருடைய மகன் எளிய பாரதியும் பாஜக தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் திநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் இணைந்தனர்.
திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை தந்த முன்னாள் அமைச்சர் ஏ கோவிந்தசாமியின் மகனான ஏ. ஜி. சம்பத் இரண்டு முறை முகையூர் எம்எல்ஏவுமாக இருந்துள்ளார்.
IPAC பிடியில் திமுக உள்ளது - ஏ ஜி சம்பத்
திமுக ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி என்று அண்ணா கூறுவார் ஆனால் இன்று அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆக செயல்படுகிறது. 10 பேர் ஷேர் ஹோல்டர்களாக உள்ளனர்.
எனது தந்தை கோவிந்தசாமி திமுகவுக்காக அரும்பாடுபட்டவர். அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் அறிக்கையில் அது இடம்பெறவில்லை. திமுகவில் உரிமை மறுக்கப்படுகிறது. யாரோ சிலரை எங்கிருந்தோ மேல் இருந்து வந்தவர்கள் போல் நாங்கள் பார்த்துக்கொண்டு நிற்பதும் அவர்கள் எங்களை பார்த்து ஏளனமாக சிரிப்பதும் அங்கு சுயமரியாதை இல்லை என்பதற்கு சான்று.
ஊழல் இல்லாத கட்சி என்றால் அது பாஜக மட்டும்தான் மோடி மீது யாராவது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூற முடியுமா?
நான் 8 முறை சிறை சென்று வந்துள்ளேன். திமுகவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். ஆனால் மக்களுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு வழங்கப்படும் வாய்ப்பு தானே என்னுடைய உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம், அந்த அங்கீகாரத்தை திமுக வழங்கவில்லை. அதே நேரம் பாஜகவில் எம்.எல்.ஏ, எம்.பி சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் வரவில்லை.
IPACக்கு 400 கோடி ரூபாய் கொடுத்து அவர்கள் கூறுவதை மட்டுமே திமுக அமல்படுத்துகிறது. திமுக மாநாடு முன்பெல்லாம் எப்படி நடக்கும் தெரியுமா. மாநாட்டில் கேட்கும் பாடல்கள் நமது உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்கும். தற்போது கருப்பு சட்டை யூனிபார்ம் அணியவேண்டும் அவர்கள் சொல்லும் இடத்தில் நிற்கவேண்டும் அவர்கள் சொல்லும் இடத்தில் தான் உட்கார வேண்டும். பாஜகவுடன் IPAC வேலை செய்திருக்கிறது ஆனால் இப்படி இல்லை.
திமுகவும் பாஜகவும் சித்தாந்த ரீதியாக வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் நான் பாஜகவில் இணைந்து உள்ளேன். சித்தாந்தத்தை மட்டும் பார்த்தால் ஒருவர் பணியாற்ற முடியாது . ஊழல் இல்லாமல் இருப்பது முக்கியமாகும் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தால் கண்டிப்பாக பாஜகவில் அதனை தெரிவிப்பேன். ஒருவரோடு போராடி மட்டும் தான் வெல்ல முடியும் என்று இல்லை உறவாடியும் வெல்ல முடியும்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அதிமுக அரசு வழங்கியதை, அதனை திமுகவினர் கிண்டலும் கேலியும் செய்கின்றனர். 20% ஒதுக்கீடு தருவதாக கூறியது திமுக தலைவர் கருணாநிதி. இதே உறுதிமொழியை திமுக தலைவர் ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூறியுள்ளார். ஆனால் தற்போது திமுகவினர் இதனை கேலி செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் அதனை தடுத்து நிறுத்துவோம் என்று கூறுகிறார்கள். இது வன்னியர்கள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக தமிழக பொறுப்பாளார் சிடி.ரவி பேசியதாவது “திமுகவில் சுயமரியாதை இல்லை. ஏ ஜி சம்பத் அவர்களுக்கு பாஜக உரிய மரியாதை வழங்கும். வடமாவட்டங்களில் பாஜகவை வலுப்படுத்த அவர் உதவுவார் என்று நம்புகிறேன். ஊடக தேர்தல் ஆய்வுகள் கூறுவதும் கள நிலவரமும் வெவ்வேறாக உள்ளன. 2016 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும் என்று சில ஊடக ஆய்வுகள் தெரிவித்தன ஆனால் என்ன நடந்தது? என அவர் பேசினார்.