ஆண்டுதோறும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான், அக்னி நட்சத்திரம். இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு கத்தரி வெயில் நீடிக்க உள்ளது.
இந்த காலகட்டத்தில் வெயில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரிக்கும். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க பகல் நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளிவருவதை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஜக்கம்பட்டி பகுதியில் மாடியில் இருந்த தகர கூரையை சரிசெய்ய சென்ற கட்டிட தொழிலாளி ஜெயவேல், பலத்த காற்றில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும், கிருஷ்ணாபுரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி முனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல், ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது மாநகராட்சி நகரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் அங்கிருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், சோளம்பள்ளம் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றில் 100 ஆண்டுகள் பழமையான மரம் வேருடன் சாய்ந்தது. இதனால், இரும்பாலை பிரதான சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, நாமக்கல் மாவட்டம், கார்கூடல்பட்டியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் 5 மின் கம்பங்கள் சாய்ந்ததுடன் அந்தப் பகுதியில் இருந்த தகரக் கொட்டைகள் தூக்கிவீசப்பட்டன.
கோவையில் ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர், வடவள்ளி, காந்தி பார்க் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் அரை மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Must Read : தொடக்கப்பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Summer, Summer Heat