பெண்களை தொடந்து ஆண் சீடர்களும் நித்தியானந்தா மீது பாலியல் புகார்!

  • News18
  • Last Updated: December 6, 2019, 12:10 PM IST
  • Share this:
பெண் சீடர்களை தொடர்ந்து ஆண் சீடர்களும் நித்தியானந்தா மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

சமீபத்தில் நித்யானந்தாவின் கனடா நாட்டு முன்னாள் சிஷ்யை சாரா லாண்ட்ரி, பெங்களூரு போலீசாருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஆசிரமத்தைச் சேர்ந்த ஆண் சீடர் ஒருவர் தன்னை நித்யானந்தா பாலியல் ரீதியில் பயன்படுத்தியதாகவும் அதை சாரா தனது புகாரில் சேர்க்க வேண்டும் என தெரிவித்ததால் சேர்த்திருந்ததாகவும் சாரா கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் விஜயகுமார், தன்னையும் நித்யானந்தா பாலியல் ரீதியில் பயன்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விரைவில் காவல்துறையையும் அணுக திட்டமிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பிடதி ஆசிரமத்தில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்துள்ளார்.

ஆண்டாள் விவகாரத்தில் சீடர்களுக்கு நித்யானந்தாவே நேரடியாக உத்தரவிட்டதாகவும் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கொடுமைகளின் உச்சகட்டமாக, நித்யானந்தா தனக்கு அவரது பெயரில் அமைந்த பேஸ்புக் மெசஞ்சர் ஐடி மூலம் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்கத் தொடங்கியுள்ளார் என்கிறார் விஜயகுமார்."உன்னை எனது தமிழ் சோஷியல் மீடியா பிரிவின் தலைவராக்குகிறேன். நீ எனக்கு வேண்டும். எனக்கு தனிப்பட்ட சேவைகளை நீ செய்ய வேண்டும். நீ சந்நியாசியாக மாறினால் உனக்கு நிறைய மாற்றங்கள் நடக்கும்" என்று நித்யானந்தா ஆசை வார்த்தைகளைக் கூறி, விஜயகுமாரை அழைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் விஜயகுமாரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ள நித்யானந்தா, ஒரு ஆண் மாடலின் அரைகுறை நிர்வாணப் படத்தை அனுப்பி அந்த இளைஞரை நீ அழைத்துவா என்று உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த விஜயகுமார் அவர் எனது நண்பர் இல்லையே என்று கூற, அதெல்லாம் எனக்குத் தெரியாது அவனை அழைத்து வா என்று வலியுறுத்தியுள்ளார் நித்யானந்தா.

வேறு சிலரை ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அழைத்து வரும்படி உத்தரவிட்ட நித்யானந்தா, அவர்களை ஆதீனவாசிகளாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

தற்போது நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார், விரைவில் காவல்துறையை அணுகி நித்யானந்தா மீது தக்க ஆதாரங்களுடன் புகாரளிக்க இருப்பதாகவும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading