யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு காவல்துறையினர் கடும் எச்சரிக்கை

யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு காவல்துறையினர் கடும் எச்சரிக்கை

கோப்பு படம்

யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில் பேட்டிகளை எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனசென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் தொந்தரவு செய்வதாக பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொகுப்பாளர் அசேன் பாஷா, அஜய் பாபு, சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  அவர்களிடம் இருந்து கேமரா, மைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

  இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் ஆபாசமாக வீடியோக்கள் வெளியிடப்பட்ட சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  இந்நிலையில் யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில் பேட்டிகளை எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே பதிவு செய்த வீடியோக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பொது இடங்களில் அநாகரிகமான கேள்விகள் கேட்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இது போன்று செயல்படும் யூடியூப் சேனல்களின் பட்டியல் எடுத்து வீடியோக்களை நீக்கியுள்ளார்களா என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கண்காணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  Published by:Sheik Hanifah
  First published: