ஆபாச யூ-டியூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்!

ஆபாச யூ-டியூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்!

குண்டர் தடுப்பு சட்டத்தின் மீதான விசாரணையை மேற்கொண்ட அறிவுரைக்கழகம் யூ-டியூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை உறுதி செய்துள்ளது.

  • Share this:
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமான இணையதள இணைப்பு மூலம் இணைத்து அந்த விளையாட்டில் பல சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசியது தொடர்பாக பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் வைத்து அவரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் 2 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக் கணக்குகளும் பப்ஜி மதன் பயன்படுத்தி வந்த யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன.
மேலும், இந்த வழக்கில் மதனுக்கு உதவியாக இருந்த அவருடைய மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு குழந்தையை காரணம் காட்டி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

Also read: நகைக்கடன் தவனை முடிவதற்கு முன்பே, நகைகளை ஏலம் விட்டு மோசடி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் நடத்தப்பட்டு, ஆபாச யூ-டியூபர் மதன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

அறிவுரைக் கழகத்தின் உறுப்பினர்கள் ரகுபதி, ராமன் மற்றும் மாசிலாமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது மதன், தான் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை எனவும், தன்னால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் மீதான விசாரணையை மேற்கொண்ட அறிவுரைக்கழகம் யூ-டியூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை உறுதி செய்துள்ளது.

இதனிடையே பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக மதனும் அடுத்ததாக அவரின் மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு எதிராக 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில் மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று பணமோசடி செய்ததன் அடிப்படையில் அவர் மீது பண மோசடி (420) பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வழக்கில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், 4 கோடி ரூபாய் பணம் சம்மந்தப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் 32 புகார்கள் மட்டுமே முறையான எழுத்துப்பூர்வ புகார்களாக ஆதாரங்களுடன் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
Published by:Esakki Raja
First published: