ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா காலத்தைவிட அதிமுகவில் அதிக உறுப்பினர்கள்: முதல்வர் பெருமிதம்

ஜெயலலிதா காலத்தைவிட அதிமுகவில் அதிக உறுப்பினர்கள்: முதல்வர் பெருமிதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் இருப்பதாகவும், இன்னும் ஆறு மாதத்தில் 50 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் எனவும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கும் பணியும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடைபெறுகிறது.

  இதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய முதற்கட்டப் பணிகள், ஜூன் 30-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நவீன வடிவில் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட உறுப்பினர் அட்டையை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்கட்டமாக 60 லட்சம் பேருக்கான அட்டைகள் தயாரான நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பரஸ்பரம் தங்களது உறுப்பினர் அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.

  புதிய உறுப்பினர்கள் மற்றும் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துள்ள நிலையில், அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் இருப்பதாகவும், இன்னும் ஆறு மாதத்தில் 50 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா காலத்தைவிட குறுகிய காலத்தில் அதிகம்பேர் அதிமுகவில் உறுப்பினராகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்றும், தினகரன் பக்கம் அதிமுக தொண்டர்கள் செல்லவில்லை என்றும் கூறினார். புதிய உறுப்பினர் படிவத்தை சசிகலா புதுப்பிக்காததால் அவர் கட்சியிலேயே இல்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விளக்கம் அளித்தார்.

  கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ‘அதிமுக உறுப்பினர்கள் பெயர்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினகரன் பக்கம் யாரும் இல்லை. தினகரன் அரசியல்வாதியே அல்ல. அவர் ஒரு கொள்ளைக்காரர்’ என்றார்.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: ADMK, ADMK members, Cm edappadi palanisamy, Jayalalithaa, Sasikala