ஈரோடு கிழக்கு தொகுதியின் பகுதிகளில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஓ.எஸ் மணியன், சோமசுந்தரம், மாதாவரம் மூர்த்தி, பெஞ்சமின், கே.வி.ராமலிங்கம், சண்முக நாதன், வளர்மதி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அந்தந்த பகுதிகளில் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விடியல் சேகர், யுவராஜா ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல். தேர்தல் களத்தில் முடிவுகள் எப்படி வருகிறது என்பதை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஒரு பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் தேர்தலாக அமையும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சந்திக்கும் தேர்தல் களம் திண்டுக்கல் தேர்தலை போல வெற்றி பெறும். இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
தற்போதைக்கு அதிமுக இந்த தேர்தலில் தனித்தே களம் இறங்க இருக்கின்றோம். கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு மூன்று நாட்களில் தெரியவரும். இந்த வெற்றி என்பது ஒரு சரித்திரம் படைத்த வெற்றியாக இருக்கும். அணிகள் பிரிந்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் 98.5 சதவீதம் பேர் எங்களுடன்தான் இருக்கிறார்கள். சரித்திரம் படைக்கும் வெற்றியாக இந்த கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி இருக்கும்.
நேற்று முதல் களப்பணியை தொடங்கி விட்டோம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் களத்தில் இறங்கி தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். அமைதியான முறையில் இந்த தேர்தல் பணியில் ஈடுபடுவோம். இரட்டை இலை சின்னம் குறித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். எங்களை பொறுத்தவரை எங்களுக்கு சின்னம் கிடைக்கும் வாய்ப்பு முழுமையாக இருக்கிறது என நம்புகிறோம்” என கூறினார்.
மேலும் “களப்பணியில் அதிமுக என்றும் சோர்ந்ததில்லை. பாஜக கூட்டணிக்கு வருவதை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்கும் பணியை தொடங்கி இருக்கின்றோம். மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்து வருகின்றோம். இஸ்லாமிய பெருமக்களுக்கு அதிமுக பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது ஹஜ் பயணத்திற்கு செல்பவர்களுக்கான நிதி பள்ளிவாசலை சீரமைப்பதற்கு நிதி ரம்ஜான் நோன்பிற்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை சிறுபான்மையின மக்களை பாதுகாத்து வருகிறோம்” என தெரிவித்தார்.
செய்தியாளர் : பாபு (ஈரோடு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Erode Bypoll, Erode East Constituency, Minister sengottayan