Home /News /tamil-nadu /

அதிமுக vs பாஜக.. தலைவர்கள் கருத்தால் முற்றும் மோதல்

அதிமுக vs பாஜக.. தலைவர்கள் கருத்தால் முற்றும் மோதல்

அதிமுக - பாஜக

அதிமுக - பாஜக

அதிமுக தனித்துப் போட்டியிடத் தயார் என்று செல்லூர் ராஜு கூறியுள்ள நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

    பாஜகவிற்கு கூடும் கூட்டத்தை காக்கா கூட்டத்தோடு ஒப்பிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்றும் காட்டமாக அவர் கூறியிருப்பது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்றும், பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

    இதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு என்றும், தமிழர்களுக்கு எது நல்லதோ, அதனையே பா.ஜ.க செய்து வருவதாகவும் கூறினார். இந்த சூழலில், பொன்னையன் கூறிய கருத்து அவரது சொந்தக் கருத்து என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்தார்.

    இதனிடையே பொன்னையனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காத விரக்தியில் அதிமுக - பாஜக கூட்டணியை குழப்பும் வகையில் பேசிவருவதாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்திருந்தார். பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் விமர்சனம்
    ஆனால் வி.பி.துரைசாமியின் கருத்தை மறுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் பாஜக சிறிய கட்சிதான் என்றும், பாமக தான் எதிர்க்கட்சி என்றும் கூறி, கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். வி.பி.துரைசாமிக்கு பதிலடி தரும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுக்கு சான்றிதழ் அளிக்க தேவை இல்லை எனவும், அவர் எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு சென்றிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் காட்டமாக கூறினார்.

    இந்த சூழலில் மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜகவிற்கு கூடும் கூட்டத்தை காக்கா கூட்டத்தோடு ஒப்பிட்டும், அதிமுகவிற்கு கூடுவது கொள்கை கூட்டம் எனவும் பேசினார்.  செல்லூர் ராஜூவுக்கு பதிலளித்த பாஜகவின் நாராயணன் திருப்பதி, அண்ணாமலை தலைமையில் பாஜக வேகமாக செயல்பட்டு வருவதாகவும், அதிமுக 2ம் கட்ட தலைவர்களின் விமர்சனம் குறித்து அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

    மேலும் படிக்க: அண்ணாமலை பிறந்த நாள்: இலவசமாக ஆட்டோ ஓட்டும் முன்னாள் ரஜினி ரசிகர்
    அதிமுக தனித்துப் போட்டியிடத் தயார் என்று செல்லூர் ராஜு கூறியுள்ள நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில், வரவிருக்கும் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி  தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Annamalai, BJP, Sellur K. Raju

    அடுத்த செய்தி