ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவின் இரட்டை இலையில் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
3 மாநில தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும் பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 10ஆம் தேதி இறுதி நாள். 27ம் தேதி வாக்குபதிவுக்கு பின் மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பி படிவ விண்ணப்பத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது. இருவரும் சேர்ந்து கையெழுத்து இட வாய்பில்லை என்று அதிமுக வட்டாரத்திலேயே கூறப்படும் நிலையில், இரு தரப்பும் தனித்து போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படலாம் என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Erode Bypoll, Erode East Constituency, Two Leaves