கிராம ஊராட்சி செயலாளர் முழுநேர பணியாளராக ஊராட்சிக்கு உதவி புரியக்கூடிய நிர்வாக பணியாளராக இருக்கிறார். ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கும் ஊராட்சிக்கும் அடித்தளமாகவும் கிராம ஊராட்சி செயலாளர் இருக்கும் நிலையில், சொந்த கிராம ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து பல்வேறு அனுபவங்களை பெற்றவராகவும் அவர் இருக்கிறார்.
மேலும், கிராம ஊராட்சி செயலாளர் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக பொறுப்புடையவராகவும் இருக்கிறார். இந்த சூழலில், கிராம ஊராட்சி செயலாளர் விதிமுறை மீறலில் ஈடுபட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ, துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கோ மற்றும் பணி மாறுதல் செய்வதற்கோ தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது.
இதற்கு வழிவகை செய்யும் வகையில் சட்டத்திருத்த முன்வடிவை பேரவையில் இன்று அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்தார். இந்த திருத்தச்சட்டத்தின் படி விதிமுறை மீறும் கிராம நிர்வாக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கிராம ஊராட்சி செயலாளரின் படிநிலைக்கு மேல் உயர் அலுவலர் ஒருவருக்கு அதிகாரமளிப்பதற்கு சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கிராம ஊராட்சி செயலாளர்களை பணியிட மாறுதல் செய்வதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டியது.
Also Read ;
பிரபாகரன் ஆன்மா சாந்தி அடையும்.. இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே குறித்து பிரேமலதா விஜயகாந்த்
இந்த புதிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக பேசிய அதிமுக எம்எல்ஏஎஸ்.பி.வேலுமணி, ஊராட்சி உதவியாளர் என்ற பதவியை ஊராட்சி செயலாளர் என்று பெயர் மாற்றம் செய்து, அவர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வை வழங்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து கிராம ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தற்போதைய சூழலில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அரசே தன்னுடைய விளக்க உரையில் தெரிவித்துள்ளது.
ஊராட்சி செயலாளர் தேர்வு செய்யப்படும்போது அவர் அந்த ஊராட்சியிலேயே வசிப்பவராக இருக்கவேண்டும். அங்கு தகுதியானவர் இல்லாவிட்டால் அந்தப் பகுதியை ஒட்டியுள்ள ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே நிபந்தனையாக உள்ளது. அப்பொழுது தான் அந்த ஊராட்சியை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உறுதுணையாக இருக்க முடியும் என்பதால் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
தற்போது அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின் படி அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டால் இவர்கள் தேர்வு செய்யப் பட்டதற்கான நோக்கமே மாறக் கூடிய சூழல் உருவாகும். இதனால் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று பேசிய எஸ்.பி.வேலுமணி, ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுவதால் இவர்களை பணி மாறுதல் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தின்படி பணிமாறுதல் செய்யப்பட்டால் அந்த ஊதிய விகிதத்தில் அவர்களின் குடும்பத்தை நடத்துவது கடினமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக பல ஊராட்சியின் செயலாளர்களாக பெண்கள் இருப்பதை நினைவில் கொண்டு இந்த பணியிட மாறுதல் சட்டத் திருத்தத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.