ADMK NEWS: அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உயர்நீதிமன்ற வழக்கு வரை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோது, முதல்முறையாக ஒற்றைத் தலைமை குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அன்றே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது மாவட்டச் செயலாளர்களின் ஒருமித்த குரலாக இருப்பதாக கூறி சர்ச்சையை தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து, ஜூன் 16ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து மீண்டும் பேசிய ஜெயக்குமார், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
அதே நாளில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கட்சி தற்போது நன்றாக தான் சென்று கொண்டிருப்பதாகவும், ஏன் திடீரென இந்த ஒற்றை தலைமை குழப்பம் வந்தது என்று தெரியவில்லை என கூறினார். அதன்பின்னர் ஜூன் 17ம் தேதி அன்று ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் வைத்திலிங்கம் மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: AIADMK - EPS vs OPS: பொதுக்குழு கூட்டத்துக்கு புறப்பட்டார் இபிஎஸ்
மேலும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், சி.பாலகிருஷ்ணன் என்பவர் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 18ம் தேதி தமது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தீர்மானக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர்.
அன்றே எடப்பாடி பழனிசாமியும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ஜூன் 19ம் தேதி எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்க அதிமுக இளைஞரணி ஆதரவு தெரிவித்தது. மேலும் எடப்பாடி பழனசாமிக்கு ஆதரவளிக்கும் வகையில் முதலாவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதேநாளில் ஓ.பி.எஸ்.சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தின் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நின்றனர். ஜூன் 20ம் தேதி அன்று பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜூன் 21ம் தேதி அன்று அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனுக்கள் மீதான விசாரணை மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந் தநிலையில் நேற்றைய தினம் அதிமுக பொதுக்குழுவுக்கான 23 வரைவு தீர்மானங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு ஒப்புதல் தந்ததாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்ததுடன் பொதுக்குழுவில் அவர் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம் என்று ஈ.பி.எஸ்.தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக ஓபிஎஸ் உடன் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பனிப்போர் போலவே மோதிவந்த எடப்பாடி பழனிசாமி, இம்முறை களம் கண்டு நேரடியாகவே ஒற்றைத் தலைமைக்கு வழிவகுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.