முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக என்ன செய்யவேண்டுமென பாஜக சொல்ல வேண்டியதில்லை.. சிங்கை ராமசந்திரன் ட்விட்டரில் காட்டம்

அதிமுக என்ன செய்யவேண்டுமென பாஜக சொல்ல வேண்டியதில்லை.. சிங்கை ராமசந்திரன் ட்விட்டரில் காட்டம்

சி.டி.ரவி, சிங்கை ராமசந்திரன்

சி.டி.ரவி, சிங்கை ராமசந்திரன்

BJP vs ADMK : திமுகவை வீழ்த்த அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும் என பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி தெரிவித்த கருத்துக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ராமசந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவு யாருக்கு என இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்ஐ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி கூறுகையில், “அதிமுக துவங்கியதே தீய சக்தியான திமுகவை வீழ்த்த தான். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ராமசந்திரன், “அதிமுக என்ன செய்ய வேண்டும் என கூறுவதற்கு சிடி ரவி யார்? தேசிய கட்சி என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லிவிடலாமா? கர்நாடகா பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என நாங்கள் அறிவுரை கூறினால் நன்றாக இருக்குமா? திமுகவை எதிர்த்து தனித்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத பாஜக அதிமுகவுக்கு அறிவுரை கூறுவது நியாயமா? ” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அதிமுக தேர்தல் பணிமனையில் அதிமுக வைத்த பேனரில் பாஜக தலைவர்கள் புகைப்படம் இடம் பெறாதது சர்ச்சையானது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளரை திரும்ப பெற மாட்டோம் என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொன்னையனும், பாஜகவுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜகவுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்திருப்பது அதிமுக பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: ADMK, BJP, DMK, Tamilnadu