அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட 3 அமைச்சர்கள் உட்பட 47 எம்எல்ஏ-க்களுக்கு மறுப்பு...

அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட 3 அமைச்சர்கள் உட்பட 47 எம்எல்ஏ-க்களுக்கு மறுப்பு...

அஇஅதிமுக அலுவலகம்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்கு 3 அமைச்சர்கள் உட்பட 47 எம்எல்ஏ-க்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்களான செம்மலை, ஆறுக்குட்டி மற்றும் சர்ச்சை எம்எல்ஏக்களான பிரபு, ராஜவர்மன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 27 அமைச்சர்கள், 46 எம்எல்ஏ-க்கள் உட்பட 73 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதில் 60 பேருக்கு புதிதாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், 3 அமைச்சர்கள், 44 எம்எல்ஏ-க்கள் உட்பட 47 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது, கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமைச்சர்களாக இருந்த பாஸ்கரன், நிலோபர் கபில், எஸ்.வளர்மதிக்கு இந்தமுறை சீட் கொடுக்கப்படவில்லை. சிவகங்கையில் இருந்து பாஸ்கரனும், வாணியம்பாடி நிலோபர் கபீல், ஸ்ரீரங்கத்தில் இருந்து எஸ்.வளர்மதியும் கடந்த முறை வெற்றிபெற்று அமைச்சராகினர்.

இதேபோன்று, மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை, கவுண்டம்பாளையம் ஆறுக்குட்டி, திருத்தணி நரசிம்மன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பாசமுத்திரம் முருகையா பாண்டியன், பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்டோரும் மீண்டும் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

மேலும் படிக்க.. முதலமைச்சர் பழனிசாமி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சேலத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்..

தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது பரபரப்பு குற்றம்சாட்டிய சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார்.

கல்லூரி மாணவியை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கும் அவருடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோருக்கும் சீட் தரப்படவில்லை. பெருந்துறையில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாச்சலம் இம்முறை வாய்ப்பு கிடைக்காததால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இவர்கள் உட்பட மொத்தம் 47 சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதன்படி, முனுசாமி வேப்பனஹள்ளியிலும், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் களம் காண்கின்றனர்.

மேலும் படிக்க... தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?

மேலும், முன்னாள் அமைச்சர்கள் கோகுலஇந்திரா, வளர்மதி, சின்னையா, நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன்,.இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மீண்டும் களம் காண்கின்றனர். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் 28 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 15 பெண்கள் மட்டுமே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளால், அதிமுக சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 6 பேருக்கு வாய்ப்பு பறிபோனது. அதன்படி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார், சோளிங்கர் கோ.சம்பத், மேட்டூர் செம்மலை, ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம், விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடம் கிடைக்காமல் போனது.

மேலும் படிக்க...  திருச்சி மாவட்டத்தில் மட்டும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேரடியாக மோதும் திமுக, அதிமுக..

இதேபோன்று, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளால் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ-க்கள் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்படி, ராமநாதபுரம் மணிகண்டன், மொடக்குறிச்சி சிவசுப்பிரமணிக்கு சீட்டு ஒதுக்கப்படவில்லை.

மேலும், மூன்று அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர். சிவகாசியில் கடந்த முறை வெற்றிபெற்று அமைச்சரான ராஜேந்திரபாலாஜி, தற்போது ராஜபாளையம் தொகுதிக்கு மாறியுள்ளார். கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அம்மன் கே.அர்ச்சுணன் கோவை வடக்கு தொகுதியில் போட்டுயிடுகிறார். அத்துடன், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார், கவுண்டம்பாளையத்திற்கு மாறியுள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: