மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க அதிக எண்ணிக்கையில் வெற்ற பெற்றிருந்த நிலையிலும் மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய ஊராட்சித் தலைவர் பதவிகளில் அ.தி.மு.க அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 77 சதவீத வாக்குகள் பதிவானது.
கடந்த 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. 515 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளில் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 240 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 272 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன. 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. 2,099 இடங்களிலும், அ.தி.மு.க. 1,789 இடங்களிலும் வெற்றி பெற்றன.
அதுபோல தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, கரூர், தர்மபுரி, தூத்துக்குடி, தேனி, நாமக்கல், விருதுநகர், அரியலூர், கடலூர் ஆகிய 13 மாவட்ட பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க அதிக உறுப்பினர்களை பெற்றது. அதுபோல தி.மு.க.வுக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் அதிக உறுப்பினர்கள் கிடைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க, தி.மு.க. சரிசமமான உறுப்பினர்களை பெற்றது.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை பதவி ஏற்றனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் தலைவர் ஆகிய 5 பதவி இடங்களுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று 27 மாவட்டங்களிலும் 5 உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி தேர்தல் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 27 துணைத் தலைவரை தேர்வு செய்ய 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்தனர். 314 ஊராட்சி ஒன்றியத் தலைவர், 314 துணைத் தலைவரை தேர்வு செய்ய 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதுபோல 9,624 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர்களை தேர்வு செய்வதற்கு 76,744 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது.
பகல் 11 மணிக்கு பிறகு மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றிய ஊராட்சித் தலைவர் பதவிகளை கைப்பற்றியவர்கள் விவரம் வெளியாக தொடங்கியது. மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி இடங்களை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சரிசமமாக பெற்று வந்தன. இறுதியில், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் அ.தி.மு.க 13 பகுதிகளிலும், தி.மு.க 12 பகுதிகளிலும், பா.ம.க ஊராட்சித் தலைவர் பதவியையும் பெற்றது. அதேபோல ஒன்றிய ஊராட்சித் தலைவர் பதவியில், அ.தி.மு.க 138 ஒன்றியத் தலைவர் பதவியையும் தி.மு.க 128 ஒன்றியத் தலைவர் பதவியையும் பெற்றது.
பா.ஜ.க 3, காங்கிரஸ் 4, அ.ம.மு.க 2, சி.பி.ஐ 3, பா.ம.க 7 ஒன்றியத் தலைவர் பதவியையும் பெற்றது. ஒன்றிய துணைத் தலைவர் பதவியைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க 98, தி.மு.க 111, பா.ஜ.க 4, காங்கிரஸ் 7, பா.ம.க 19 ஒன்றிய துணைத் தலைவர் பதவியையும் பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க அதிக தொகுதிகளில் வென்ற நிலையிலும், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும், ஒன்றிய ஊராட்சித் தலைவர் பதவியையும் அ.தி.மு.க அதிக அளவில் வென்றுள்ளது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2019