Home /News /tamil-nadu /

தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்... விரைவில் நிலை மாறும் : சசிகலா சூசகம்

தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்... விரைவில் நிலை மாறும் : சசிகலா சூசகம்

VK Sasikala

VK Sasikala

சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் நிலை மாறும், தலை நிமிரும் இது உறுதி என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் கிங் மேக்கராக உருவெடுத்துக் கொண்டிருந்த சசிகலாவை எதிர்த்து அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் தர்ம யுத்தம் நடத்தியதாலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல வேண்டியிருந்ததாலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறை சென்று சசிகலா, திரும்பிவருவதற்குள் அதிமுகவில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

அதிமுகவை உடைத்து, டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்க, ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து ஆட்சி நடத்த சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் எனக் கூறி, அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்தார். எனினும் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் பலரும் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற கோஷத்தை முன்மொழிந்தனர். ஒரு சாரார் சசிகலா மீண்டும் கட்சியின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என பேசினர். கட்சியின் தொண்டர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை சசிகலாவுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக இருப்போர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இ.பி.எஸ்-ஐ அவமதித்து ஒருமையில் பேசியதாலும், அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதற்காகவும் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சமீபத்தில் நீக்கப்பட்டார்.

Also read:  எந்நேரமும் வெளிநாட்டிலேயே இருக்க முடியாது - ராகுல் காந்தியை வாரிய மம்தா பானர்ஜி

சசிகலாவுக்கு ஆதரவானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான வரும் டிசம்பர் 5ஆம் தேதியன்று மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார். இதில் தொண்டர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் நிலை மாறும், தலை நிமிரும் இது உறுதி என தெரிவித்துள்ளார்.

“தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவான இயக்கம் அதிமுக. எத்தனையோ தடைகளை தாண்டி வந்த இயக்கம். அதே போல ஜெயலலிதாவும் எத்தனையோ தடைகளை தாண்டி வந்தவர். அவர் வழியில் எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் இந்த நொடி வரை பாடுபட்டு வருகிறேன். இன்றைய நிலையை பார்க்கும் போது இதற்காகவா நம் இருபெரும் தலைவர்கள் கழகத்தை காப்பாற்றினார்கள் என நினைத்து தொண்டர்கள் வேதனைப்படுகிறார்கள்.

Also read:  டெல்லியில் தாய், மகள் மீது கொடூர தாக்குதல் - பகீர் காட்சிகள்

என்றைக்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது. இன்றும் எத்தனையோ தொண்டர்களும், நிர்வாகிகளும் கழகம் பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது. தைரியமாக இருங்கள். நம் இயக்கத்தை சரி செய்து பழையபடி நம் தலைவர்கள் வகுத்த சட்டத்திட்டங்களின்படி செயல்பட வைத்து எதிரிகளின் கனவுகளையும் தகர்த்து, அதிமுகவைச் சேர்ந்தவன் என பெருமையோடும், மிடுக்கோடும் சொல்லிக்கொள்ளும்படி விரைவில் மாற்றிக்காட்டுவோம்.

அண்மைக்காலமாக எவ்வித காரணமும் இன்றி காழ்புணர்சியின் பொருட்டு உதாசீனப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் தாங்களாக ஒதுங்கிக் கொண்டவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொருத்திருங்கள். உங்கள் மக்கள் பணிகளை தொடருங்கள். விரைவில் அதிமுகவின் நிலை மாறும், தலை நிமிறும், இது உறுதி.

என் உயிர் மூச்சு உள்ளவரை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தொண்டர்களின் இயக்கமாக அதிமுக மாறும் வரை நான் உழைத்துக் கொண்டே இருப்பேன், ஓய்ந்து விடமாட்டேன் என உறுதி கூறுகிறேன்” இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

 
Published by:Arun
First published:

Tags: ADMK, Sasikala

அடுத்த செய்தி