அதிமுக-வில் எந்த தொண்டரும் அதிருப்தியில் இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று சந்தித்து பேசினர், இந்த சந்திப்பு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் ஒரு மணி நேரம் நீடித்தது . தமிழகத்தின் சில மாவட்டங்கள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி குறித்தும், தமிழக நலன்கள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.
மேலும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, மீண்டும் அதிமுக-வை வழிநடத்துவேன் என தொடர்ந்து பேசிவருவதால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் அவருடன் விவாதித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரதமரைச் சந்தித்தபின் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிக்காக பிரசாரம் மேற்கொண்டதற்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என தெரிவித்தார். மேலும் தமிழகத்ததில் எந்த அதிமுக தொண்டரும் அதிருப்தியில் இல்லை . காவிரிக்கு குறுக்கே கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக் கூடாது என பிரதமரிடம் வலியறுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், ஐந்து முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட எடுக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் தமிழகம் பாலைவனமாகிவிடும்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக மாநில அரசு கூறுகிறது. மத்திய அரசு தடுப்பூசியை முறையாக வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மை என்றால் தமிழக மக்களை கொரோனா பிடியில் இருந்து காக்க போதுமான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்கிறார்கள் இந்திய அரசின் தலையீட்டின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் ஆனால் படகுகள் திரும்பத் தருவதில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையீட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் படகுகளை திரும்பப் பெற்று தர வேண்டும்.
கோதாவரி - காவேரி இணைப்பு திட்டத்துக்கு இந்திய அரசு முழு ஒப்புதல் தந்துள்ளதற்கு தமிழக மக்களின் சார்பிலும் அதிமுக சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு எங்களால் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதியும் வழங்கியுள்ளது. அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி விரைந்து நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.