முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “அவைத்தலைவர் நடுநிலையாக செயல்படவில்லை...” - கடிதத்தை புறக்கணித்து ஓபிஎஸ் தரப்பு பேட்டி!

“அவைத்தலைவர் நடுநிலையாக செயல்படவில்லை...” - கடிதத்தை புறக்கணித்து ஓபிஎஸ் தரப்பு பேட்டி!

வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன்

வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம் - பண்ருட்டி ராமச்சந்திரன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலையாக செயல்படவில்லை. எடப்பாடி பழனிசாமியின் முகவராகவே செயல்பட்டிருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ள ஓபிஎஸ் தரப்பினர் தமிழ்மகன் அனுப்பிய கடிதத்தை  நிராகரித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை, பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

அதன்படி, அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் சுமார் 2,675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதை போல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் இன்று மாலை 7 மணிக்குள்ளாக எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பிற்கு தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைத்திலிங்கம், "பொதுக்குழுதான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர, முன் கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்வது தவறு. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதம் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த கடிதத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு.

நடுநிலையை தவறவிட்டு, எடப்பாடி பழனிசாமியின் முகவராகவே அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் செயல்பட்டிருக்கிறார்.  உச்சநீதிமன்ற தீர்ப்பு படி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்படவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம்” என தெரிவித்து அவைத்தலைவரின் கடித்தத்தை புறக்கணித்தனர்.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, OPS - EPS, Two Leaves