அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் ஈபிஎஸ் தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாதம் செய்தனர்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக விதிப்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதன்பின்னர் இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஜூலை 11ம் தேதிக்கு முன் அதிமுகவில் இருந்த நிலையை மீண்டும் தொடர உத்தரவிடுமாறு ஓபிஎஸ் தரப்பு கோரியது. அப்போது, எந்த விளக்கமும் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டப்பட்டது. அப்போது யார் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை, கருத்தில் கொள்ளத் தேவையும் இல்லை என கூறிய நீதிமன்றம், பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என கூறியது.
மேலும் ஏற்கனவே வைக்கப்பட்ட வாதங்களை மீண்டும் மீண்டும் எடுத்து வைக்கக்கூடாது என்று நேற்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிருஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைத்தார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவில் பல்வேறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர். மேலும் 2011 டிசம்பரில் வரையறுக்கப்பட்ட அதிமுக சட்ட விதிகளை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் வழக்கறிஞர் முன் வைத்தார்.
இதனையடுத்து அதிமுகவில் தற்போது திருத்திய விதிகளுக்கும் பழைய விதிகளுக்குமான ஒப்பீடு ஆவணம் சமர்ப்பித்து பொதுச்செயலருக்கான பொறுப்பு ஒருங்கிணைப்பாளர். இணைஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்பட்டது எப்படி என அதற்கு மேற்கொள்ளப்பட்ட விதிமுறைகளை ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் படித்துக் காட்டினார்.பொதுச்செயலாளர் பொறுப்பை மாற்றி இரட்டை தலைமையை உருவாக்கியது பொதுக்குழுவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆம் என விளக்கம் அளித்தனர்.
அப்படியானால் செயற்குழு என்றால் என்ன? என்பது பற்றி விளக்க நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர். பொதுச்செயலாளர் பொறுப்பை மாற்றி இரட்டை தலைமையை உருவாக்கியது பொதுக்குழுவா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தியிருந்தால் இரட்டை தலைமை தேவைப்பட்டிருக்காது என ஓபிஎஸ் தரப்பு பதிலளித்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓராண்டுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி இருக்கலாம் என ஓபிஎஸ் தரப்பினர் நீதிபதியிடம் கூறினர். மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஈபிஎஸ் தரப்பு செயல்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு நீதிபதியிடம் கூறினார். ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என அதிமுக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த உள்ளதை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர்.
மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு பின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே நிர்வாக பதவி என்றும் அதிமுகவில் ஒருங்கிணைபாளர்கள் பதவி காலம் 5ஆண்டுகள் இதில் நிர்வாகிகள் நியமனம் உட்பட அனைத்திலும் இருவரும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் நீதிபதிகளிடம் வாதத்தை முன் வைத்துள்ளனர்.
தேர்தல் தொடர்பான முடிவு நிர்வாகிகள் நியமனத்தை இரட்டைத் தலைமையின் முடிவே செல்லும் என்றும் கட்சி முடிவுகளை இரட்டை தலைமையும் இணைந்தே எடுக்க முடியும் என்றும் இரட்டை தலைமை ஒரே ஆன்மாவாக செயல்பட வேண்டும் என்பது போல அதிமுக விதியில் கூறப்பட்டுள்ளது. அதிமுக விதி 42-ஐ சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டனர். மேலும் கூட்டத்திற்கு முன் தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது விதிமீறல் என்றும் பொதுக்குழுவை ஒருங்கிணைபாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும் என்று அவை தலைவரல்ல என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர்.
ஜுலை மாதம் நடந்த பொதுக்குழு சட்டவிரோதம் என வாதிட்ட ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் ஈபிஎஸ் தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும் இந்த வழக்கு விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி.தினகரன் வழக்கை சுட்டிக்காட்டி வாதம் நடைபெற்றது. மேலும் தலைமை அலுவலகம் பொறுப்பில் 10 ஆண்டுகள் இருந்தவர்கள்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் ஈபிஎஸ் ஒருவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில் அதிமுக விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வாதம் வைத்த ஓபிஎஸ் தரப்பினர் கூறினர். இந்த நிலையில் இரண்டு மணி நேரமாக ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விசாரணை நாளை நண்பகல் 12 மணிக்கு ஓபிஎஸ் தரப்பு வாதம் தொடரும் என விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, OPS - EPS, Supreme court