நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பேரூராட்சியின், 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக மாற்றப்பட்டு, வெற்றி பெற்றதாக சான்றிதழ் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்பு லட்சுமி என்பவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு குலுக்கல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை பார்வையிட்டுவிட்டு , முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பது நிருபணமாகியுள்ளது என தெரிவித்ததுடன் தொடர்புடைய தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி, திமுக வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருக்கிறார். ஓர் அரசு அதிகாரியே திமுகவினரால் மிரட்டப்படுகிறார் என்றால் சாதாரண வேட்பாளர்கள் எம்மாத்திரம் திமுகவினரின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
Also Read: மீண்டும் அரியணை ஏறுவாரா அகிலேஷ்?
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் தகுந்த ஆதாரத்துடன், சாதுர்யமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியதன் காரணமாக அவருக்கு நல்லத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இவரைப் போல் துணிச்சலாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள், பண வசதியின்மை காரணமாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள், திமுகவினரின் மிரட்டல்களுக்கு பயந்து நீதிமன்றத்தை அணுகாதவர்கள் விவரமின்மை காரணமாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள் என பல பேர் இருக்கிறார்கள். இதேபோல வாக்குப் பதிவிலும் ஆங்காங்கே முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் தக்கப்பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.