Home /News /tamil-nadu /

ஒற்றை தலைமையை நோக்கி அதிமுக- யார் கை ஓங்குகிறது?

ஒற்றை தலைமையை நோக்கி அதிமுக- யார் கை ஓங்குகிறது?

ஒற்றை தலைமை நோக்கி அதிமுக

ஒற்றை தலைமை நோக்கி அதிமுக

”அதிமுக சட்டவிதிகளின்படி இப்போதும் கட்சிக்கு பொதுச் செயலாளர் சசிகலாதான். அவரை நீக்க முடியாது. இது குறித்த வழக்கில் தங்களுக்கே சாதகம்" என்கிறது சசிகலா தரப்பு. "அவர் அதிமுக அடிப்படை உறுப்பினராக கூட தற்போது இல்லை. அவரை அதிமுக ஏற்காது. குழப்பத்தை ஏற்படுத்துகிறார்" என்கிறது ஈபிஎஸ் தரப்பு

மேலும் படிக்கவும் ...
புரட்சித் தலைவராக தொண்டர்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் திமுக தலைவரும்  தனது நண்பருமான மு.கருணாநிதியோடு முரண்பட்டு, 1972ம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார். தொடர்ந்து 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். தமிழ்நாட்டில்  திமுக - காங்கிரஸ் என்றிருந்த தேர்தல் களம், திமுக - அதிமுக என்றும் குறிப்பாக மு.கருணாநிதி - எம்.ஜி.ராமச்சந்திரன் என்றாகியது.  எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு மு.கருணாநிதி - ஜெ.ஜெயலலிதா என்று மாறியது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவர் காலத்திலும் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும் இவர்களே ஆளுமை செலுத்தினர். ஒற்றைத் தலைமையாக தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தனர்.குறிப்பாக, கால் நூற்றாண்டு காலம் அதிமுகவின் பொதுச் செயலாளர், இருதுருவ அரசியலின் ஒருதுருவமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தார். கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவரே முதலமைச்சாராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தனி அணி,  தமிழ்நாட்டு வருகையை தாமதப்படுத்திய ஆளுநர், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பால் சசிகலாவிற்கு சிறை தண்டனை,(ஜெயலலிதா இறந்து விட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்). கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள்,  நெருக்கடியான நிலையில் கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,  ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி என்று கட்டமைத்து விட்டு ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்து விட்டு  சிறைக்கு சென்ற சசிகலா....என்று தினம் தினம் திருப்பங்கள் ஏற்பட்டன.

அதிமுக ஆட்சி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்த ஓ.பி.எஸ் அணி பின்னர் இபிஎஸ் அணியோடு இணைந்தது. இணைப்பையடுத்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். ஒ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக நிர்வாக அமைப்பு மாறியது. அதிமுகவின் ஒரு அணியின் வேட்பாளராக நின்ற டிடிவி தினகரன் சில மாதங்களிலேயே சுயேச்சையாக ஆர்.கே.நகர் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்று, பலரையும் உற்று நோக்க வைத்தார்.

சசிகலாவின் தயவால் வாய்ப்பு பெற்று வளர்ந்தவர்களும் அவரை கடுமையாக விமர்ச்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கம்பீரமாக சிறைக்குச் சென்றவர்  திரும்பி வரும்போது காரில் கட்சிக் கொடியைக் கட்டுவதற்கே சட்ட சிக்கல் ஏற்பட்டது. ஏன்..ஜெயலலிதா சமாதிக்கே செல்ல முடியவில்லை. ஏதே செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்திருக்கும் போது, சட்டப்பேரவைத் தேர்தல் வந்ததும், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிவித்தார். அதிமுக, அமமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை...இப்படி திருப்பங்கள் தொடர்ந்தன.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவிற்கு பிறகு பலரும் எதிர்பார்த்தது போலவே திமுக ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக எதிர்க் கட்சியாகியுள்ளது. அதை எதிர்க் கட்சியாக்கிய திருப்தியோடு அமமுக உள்ளது.
இத்தகைய சூழலில்தான் அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசி வரும் ஆடியோக்கள்  பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஈபிஎஸ் தொடங்கி மாவட்ட நிர்வாகிகள் வரை பலருக்கும் பதற்றத்தை பற்ற வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அதிமுக சட்டவிதிகளின்படி இப்போதும் கட்சிக்கு பொதுச் செயலாளர் சசிகலாதான். அவரை நீக்க முடியாது. இது குறித்த வழக்கில் தங்களுக்கே சாதகம்" என்கிறது சசிகலா தரப்பு. "அவர் அதிமுக அடிப்படை உறுப்பினராக கூட தற்போது இல்லை. அவரை அதிமுக ஏற்காது. குழப்பத்தை ஏற்படுத்துகிறார்" என்கிறது ஈபிஎஸ் தரப்பு.
ஆனால், சசிகலாவிற்கு  எதிராக  முதலில் களமிறங்கிய ஓபிஎஸ் கள்ள மவுனம் காக்கிறார். சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஈபிஎஸ் சசிகலாவை கடுமையாக எதிர்க்கிறார். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...? என்கிற கவுண்டமணியின் வசனம் நினைவிற்கு வந்தாலும் இந்த மோதல் ஒன்றைத் தெளிவாக்கியுள்ளது.

இரட்டைத் தலைமைக்கு முடிவு

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் மீண்டும் ஒற்றைத் தலைமையை நோக்கி அதிமுக என்பதே. ஆம்..அந்த ஒற்றைத் தலைமை யார்...? தற்போதைய கள நிலவரத்தை வைத்துப் பார்க்கும் போது ஓ.பி.எஸ் தலைமைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவே தெரிகிறது. காரணம், வேட்பாளர் தேர்வு தொடங்கி, பிரச்சாரம்...,தேர்தல் வெற்றி..., எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை அனைத்திலும் ஈபிஎஸ் கைதான் ஓங்கியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்றாலும் தேனி மாவட்டத்திற்குள் முடக்கப்பட்டு விட்டார் ஓபிஎஸ். எனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற திருப்தியோடு அவர்  ஈ.பி.எஸ் ஆதரவாளராகவே தொடர்வாரா? பழைய நினைவுகள், நிகழ்வுகளால் மீண்டும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சேலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், தொண்டர்கள் என் பக்கம்... என்று தொலைபேசி உரையாடலைத் தொடர்கிறார் சசிகலா. விரைவில் தொண்டர்களை, நிர்வாகிகளை மாவட்டவாரியாக சந்திக்க வருகிறேன் என்கிறார். வாய்ப்பே இல்லை என்று மல்லுக்கட்ட தயாராகி வருகிறது ஈபிஎஸ் தரப்பு. இந்த களத்தில் ஓபிஎஸ் இல்லை. இதற்கு தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளே சாட்சி என்கிறார்கள் மூத்த தலைவர்கள் பலர். அதிமுகவில் அடுத்து வரும் ஒற்றைத் தலைமை,ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கட்சிக்கு பொதுச் செயலாளராகிய சசிகலாவா...? ஆட்சிக்கு முதலமைச்சராகிய எடப்பாடி பழனிச்சாமியா..? விரைவில்...
Published by:Murugesh M
First published:

Tags: ADMK, Edappadi Palanisami, Sasikala

அடுத்த செய்தி