ஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு?

ஓபிஎஸ்- இபிஎஸ்

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது.

  • Share this:
    சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட உள்ளது. அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என முடிவு செய்யப்படாமலே திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இன்று முதல் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவது கேள்விக்குறியானது.

    இந்நிலையில், அதிமுக தலைமை தரப்பில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே, சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், துரோகிகளை துவம்சம் செய்ய சசிகலா பொறுபேற்க வேண்டும் என்று குறிப்பிட்டு அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் எனும் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

    இதேபோல, எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்கும், கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு வாழ்த்துக்கள் எனவும் சிலர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
    Published by:Vijay R
    First published: