திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கீரதங்குடி, கீழப்பாலையூர், மேலப்பாலையூர், ஆதிச்சமங்கலம், மஞ்சக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கையின்போது காற்று வீசவில்லை. எனினும் 24ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்தது. அதன் காரணமாக தாளடி, சம்பா உள்ளிட்ட அனைத்து பருவங்களிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. மாவட்டம் முழுவதும் 2,22,120 ஏக்கர் நெற்பயிர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் 3,96,625 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகையையும் நிவாரணத்தையும் வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
Also read: சென்னை தீவுத்திடல் பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட சீமான் கோரிக்கை
மேலும், இதுபோன்ற பேரிடர் கால சூழ்நிலைகளில் விவசாயிகளையும் பொது மக்களையும் சிலர் குழப்ப நினைக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக சிலர் நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை என பொது மக்களையும் விவசாயிகளையும் குழப்பி வருகின்றனர் என்று கூறினார்.
திமுக எம்பி ஆ.ராசாவைப் பற்றி உலகம் அறியும் என்று கூறிய காமராஜ், அவருக்காக திமுகவினர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் என்றால் அவர்களின் யோகிதை என்னவென்று தெரிகிறது. தமிழக முதல்வர் கூறியதுபோல காங்கிரஸ் ஆட்சியின்போதே கூட்டணியில் இருந்த திமுகவின் அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முகாந்திரம் இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தால் காங்கிரஸ் அரசு செய்தது தவறா? தீர்ப்பை நீதிமன்றம்தான் வழங்க வேண்டும், இவர்களே வழங்கமுடியாது. ராசாவிற்கு திமுகவினர் சப்பைக்கட்டு கட்டுவது வெட்கக்கேடானது என்றார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.