வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் தகராறு...அதிமுக பிரமுகர் கொலை

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிலம்பரசன். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

வாயலூர் ஊராட்சி மன்ற அதிமுக கிளை கழக செயலாளராக இருந்த சிலம்பரசன், வடசென்னை அனல்மின் நிலைய பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை எடுத்து வேலை செய்து வந்தார். ஊரணம்பேடு பகுதியில் தனது ஒப்பந்தப் பணிகளை பார்வையிட வெள்ளிக்கிழமை காரில் சென்றார்.

அப்போது வழியில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிலம்பரசனை வழிமறித்திருக்கிறது. காரிலிருந்து இறங்கி அவர்களிடம் என்ன என கேட்க முற்படுவதற்குள் அந்த கும்பல் சரமாரியாக வெட்டத் தொடங்கியிருக்கிறது. உடல் முழுவதும் காயம்பட்ட சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.


சத்தம் கேட்டு அருகில் இருந்த நிறுவன காவலாளி ஓடிச் சென்று பார்த்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் அந்த காவலாளி சேர்த்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிலம்பரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். தகவலறிந்து சென்ற காட்டூர் போலீசார் சிலம்பரசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்க பணியில் ஒப்பந்தம் எடுப்பதில் அதிமுக பிரமுகர் சிலம்பரசனுக்கும் வேறு ஒருவருக்கும் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சிலம்பரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஒப்பந்தம் தொடர்பாக சிலம்பரசனிடம் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading