சசிகலாவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருப்பதாகவும் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டால் வெற்றி பெற்றிருந்திருப்போம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கூறியுள்ளார். ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மனக்கசப்பு இருப்பதாகவும் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தொலைக்காட்சியின், வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அன்வர் ராஜா கூறியதாவது-
எப்போதும் சசிகலாவை 'சின்னம்மா' என்றுதான் அழைத்து வருகிறோம். அந்த காலத்திலிருந்தே சின்னம்மா என்றுதான் அழைக்கிறோம். இப்போதும் அப்படித்தான் சொல்கிறோம். திமுக தலைவரை கலைஞர் என்று நான் அன்றைக்கும் சொன்னேன்; இன்றைக்கும் சொல்கிறேன்.
என்னைத் தவிர்த்து அதிமுகவில் எல்லோருமே சின்னம்மா காலில் விழுந்தவர்கள்தான். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனபோது, சின்னம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் தான் அதிமுகவின் தற்போதைய தலைவர்கள்.
ஓபிஎஸ் அவர்களின் மனைவி மறைந்ததற்கு ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். சின்னம்மா சசிகலாவும் துக்கம் விசாரித்தார். இதுவெல்லாம் அரசியல் நாகரிகம். அதைத்தான் நானும் கடைபிடிக்கிறேன். சசிகலா ஆதரவு ஓட்டு தமிழகத்தில் கணிசமாக உள்ளது. அந்த வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்தால் கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நிர்வாகிகள் கருதுகின்றனர்.
கட்சியில் சேர்வதற்கு சசிகலா தயாராகத்தான் இருந்தார். ஆனால் அதிமுக தரப்பில்தான் யாரும் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதுதான் பிரச்சனை. சசிகலாவை கட்சியில் சேர்த்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருந்திருக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சில விஷயங்களில் முடிவெடுப்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மனக்கசப்பு இருக்கிறது. அதனால்தான் 18 பேர் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை
ஜெயலலிதா காலத்தின்போது பொதுக்குழுவில் பேசுவதற்கு பரிபூரணமான சுதந்திரம் இருந்தது. நல்ல கருத்துக்களை கூறினால் ஜெயலலிதா ரசிப்பார். அப்படி கருத்து சொன்னவர்களை நேரில் அழைத்து பாராட்டுவார். அந்த வகையில் நான் அதிக முறை பாராட்டு பெற்றுள்ளேன். ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே முடிவு எடுப்பதில் கருத்துவேறுபாடு இருக்கிறது. இருவரும் ஒற்றுமையாக இருந்து வழி நடத்தினால் கட்சிக்கு நன்றாக இருக்கும்.
இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anwar raja, Sasikala