ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக

7 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
அதிமுக தலைமை அலுவலகம்
  • Share this:
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்மையில் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அதோடு மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.இந்த 7 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.


தெரிந்து கொள்ள : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் - முழு விவரம்

இதனிடையே திங்கள்கிழமைக்குள் இடங்கள் உறுதி செய்யப்பட்டு தேமுதிகவினர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின் 12வது வார்டில் தனது மகனுக்கு சீட் தர திமுக எம்எல்ஏ ரகுபதி 10 லட்ச ரூபாய் பணம் கேட்பதாக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா குற்றம்சாட்டியுள்ளார். தனது மகன் முரளிதரனுக்கு பணம் வாங்காமல் சீட்டு வழங்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சுப்பையா கடிதமும் எழுதியுள்ளார்.ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏ ரகுபதி, தான் யாரிடமும் பணம் கேட்டதில்லை என்றும், தன் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் ஆலவயல் சுப்பையா குற்றம்சாட்டியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மதிமுக கட்சிக்கு பம்பரம் சின்னத்தையும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்ஷா என்ற மூன்று சின்னங்களில் ஒன்றை ஒதுக்கக் கோரி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த 3 சின்னங்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதை அடுத்து த.மா.கா. நீதிமன்றத்தை நாடியுள்ளது.

 
First published: December 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்