Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழுவில் என்ன நடந்தது - முழு விவரம்

அதிமுக பொதுக்குழுவில் என்ன நடந்தது - முழு விவரம்

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அதிமுக செயற்குழு- பொதுக்குழு கூட்டம் தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தீர்மானங்கள் நிராகரிப்பு, சி.வி.சண்முகம் ஆவேசம், ஓ.பன்னீர்செல்வம் மீது பாட்டில்,  காகிதம் வீச்சு என பல்வேறு பரபரப்புகளுடன் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று முடிந்தது. தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

    பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை ஆகியவற்றை வைத்திருந்த உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
    கூட்டத்தில் சுமார் 2,665 பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒற்றை தலைமை குறித்த விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடந்த சில நாட்களாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இருவரும் ஒன்றாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

    முன்னதாக வீட்டில் இருந்து புறப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் காரில் வருவதற்கு பதிலாக பிரச்சார வாகனத்தில் பொதுக்குழுவுக்கு வருகை தந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலுக்கு ஓபிஎஸ் வருகை தந்தபோது, ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் உறுப்பினர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. மேலும், ஓபிஎஸை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கினார். ஓபிஎஸை வெளியேற கோரி கேஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம்... அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பேச்சு


    இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவுக்கு வந்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். பொதுக்குழு தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், திடீரென அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக மைக் முன்னே 3 முறை கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும் ஒற்றை தலைமையுடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதேபோல் ஒற்றை தலைமை நாயகர் என எடப்பாடி பழனிசாமியை ஜெயக்குமார் புகழ்ந்து பேசினார்.

    அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய சி.வி. சண்முகம், எம்ஜிஆர் ஜெயலலிதா போல் ஒற்றை தலைமை ஏற்படுத்த வேண்டும் .இரட்டை தலைமையால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. தெளிவான ஒற்றை தலைமை ஏற்படுத்த வேண்டும். இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு, ஒற்றை தலைமை கீழ் உருவாக்குவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என பேசினார்.

    மேலும் படிக்க: ஓ.பி.எஸ் மீது காகிதம், தண்ணீர் பாட்டில் வீச்சு | வீடியோ


    இதை தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மேடையில் பேச முற்பட்டார். அப்போது அவருக்கு அவையில் பலத்த எதிர்ப்பு எழுந்துதது.

    இதனைத் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மேடையில் முழக்கம் எழுப்பினர். எதிர்ப்பு வலுக்கவே ஓ பன்னீர்செல்வம் மேடையிலிருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் மீது கூட்டத்திலிருந்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்கள் வீசப்பட்டன. அதன் பின்பு அவர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Edappadi palanisamy, O Panneerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி