அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை கருத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதனையடுத்து, அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தடைஉத்தரவு ஏதும் பிறப்பிக்காத நிலையில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அ.தி.மு.க பொதுக்குழுவில் புதிய தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும், மேடையில் இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். அதை தொடர்ந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்கள் அவையில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் பொன்னையன் முன்மொழிய, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவார் என தெரிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மீண்டும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும். அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீச்சு: நிரந்தர அவைத் தலைவர் - அ.தி.மு.க பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வுகள்
அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனித்தனியாக முகாமிட்டனர். இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் டெல்லி செல்வதற்கு முடிவு செய்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க முடிவு செய்துள்ளார். பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.